சித்திரையில் சுவாமிக்கு விழா நடைபெறுகிறது. ஐப்பசியில் சிங்காரவேலருக்குப் பத்துநாள்களுக்குப் பெருவிழா. இதில் ஐந்தாம் நாள் தேர்விழா முடிந்து வேலவர் அம்மையிடம் சூரனை சம்ஹாரம் செய்ய வேல் வாங்கி மலைக்குச் சென்றபின், வேலவர் திருமேனியில் சில மணிநேரம் வியர்வைத் துளிகள் காணப்படும். இஃது ஓர் அற்புதமான காட்சி. “சிக்கலில் வேல் வாங்கிச் செந்தூரில் சம்ஹாரம்” என்பது இப்பகுதியில் வழங்கும் பழமொழி. வசதியும் நல்ல பராமரிப்பும் உடைய கோயில், ஆலயச்சார்பில் தங்கும் விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. நாடொறும் ஆறுகால வழிபாடுகள். கல்வெட்டு இத்தலத்து இறைவனை “பால் வெண்ணெய் நாயனார்” என்று குறிப்பிடுகிறது. விழாக்கள் நடத்தவும் விளக்கெரிக்கவும் நிலங்களை நிவந்தமாக அளித்த செய்திகள் கல்வெட்டால் தெரியவருகின்றன. ‘சிக்கல் மகாத்மியம்’ - தலபுராணமுள்ளது. “வானுலாவு மதி வந்துல வும்மதின் மாளிகை தேனுலாவு மலர்ச் சோலை மல்குந்திகழ் சிக்கலுள் வேனல்வேளை விழித்திட்ட வெண்ணெய்ப் பெருமானடி ஞானமாக நினைவார் வினையாயின நையுமே.” (சம்பந்தர்) க்ஷேத்திரக்கோவை பிள்ளைத் தமிழ் முக்கட்பு ராரியொடு சக்கரா யுதக்கடவுள் முண்டகத் தவிசிருந்தோன் மூவரும் சிரகர கம்பிதஞ் செய்துநம் முருகன்பர ராக்கிரமனெனச் சக்ரவா ளத்துடன் மிக்கநவ கண்டமும் தருமட்ட குலகிரிகளும் சத்தசா கரமும் கணத்தினிற் சுற்றிவரு தாருகன் வாயினுதிரம் கக்கிப் பதைத்துக் கிடந்தே யிருக்கக் கடைக்கண் சிவந்தவேலன் கற்பகா டவிதடவு மண்டபம் கோபுரம் கனகமதில் நின்றிலங்கும் சிக்கலம் பதிமேவு சிங்கார வேலனாம் தேவர்நாய கன்வருகவே திகமும்வெண் ணெய்ப்பிரா னொருபா லுறைந்தமெய்ச் செல்விபா லகன்வருகவே. |