பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 63


உள்ளது.  மணிவாசகரும்  சிவகாமியும்  உடன்எழுந்தருளியுள்ளனர். நேரே
மூலவர்  தரிசனம்.   சிவலிங்கத்திருமேனி -  தீண்டாத் திருமேனி. குவளை
(கவசம்) சார்த்தியே  அபிஷேகம்  செய்யப்படுகிறது.  அவ்வப்போது புனுகு
சட்டம் சார்த்தப்படுகிறது.  திருமேனி  கூம்பு  வடிவில்  உள்ளது. அழகான
மூர்த்தம், கோஷ்ட மூர்த்தங்களாகத் தக்ஷிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா,
துர்க்கை ஆகியோர் உளர். துர்க்கை  உருவம்  மிகவும் அழகு வாய்ந்தது -
அஷ்டபுஜங்களுடன் சங்கு சக்கரம்  ஏந்தி  அழகாகக்  காட்சி   தருகின்ற
திருமேனி. சண்டேசுவரர்  சந்நிதி  உள்ளது.  உற்சவத்  திருமேனிகளாகச்
சந்திரசேகரர், பிரதோஷநாயகர், பள்ளியறைநாதர், விநாயகர், சுப்பிரமணியர்,
நால்வர், தலஐதீகத்துக்குரிய முறையில் ஒரு கையில் தாமரையும் மறுகையில்
‘கண்’ணும் கொண்டிலங்கும் மகாவிஷ்ணு முதலிய திருமேனிகள் உள்ளன.

     மூலவருக்கு எதிரில் உள்ள மகாவிஷ்ணுவுக்குத் தீபாராதனை முடிந்த
பின்பு சடாரி சார்த்தி தீர்த்தம் தரும் மரபு உள்ளது.

     அம்பாள்  சந்நிதி  தனிக்கோயிலாகவுள்ளது.  தெற்கு   நோக்கியது.
துவாரபாலகியர் உளர். அம்பாள் நின்ற கோலம். அபயவாரத்துடன் கூடிய
நான்கு திருக்கரங்கள்.

     சந்நிதியில்   மேற்புறத்தில்  கல்லில்  மீன்  உருவமும் கைகூப்பிய
உருவமொன்றும்,  பக்கத்தில்  யானையும்,  பெண்  ஒருத்தியும்  நிற்கும்
அமைப்பில் சிற்பம் உள்ளது.

     நாடொறும் ஐந்து கால பூஜைகள்  நடைபெறுகின்றன. மாசி மகத்தில்
பத்து நாள்களுக்குப் பெருவிழா நடைபெறுகின்றது. இதுதவிர,  கிருத்திகை,
ஆடிவெள்ளி, ஆடிப்பூரம், கார்த்திகை தீபம்,  ஆனித்     திருமஞ்சனம்,
ஆருத்ரா,  கருடசேவை முதலிய சிறப்பு விழாக்களும் நடைபெறுகின்றன.

     நகரத்தார் திருப்பணியில் 26-4-1937-ல் கும்பாபிஷேகம் நடத்தப்பெற்ற
இத்திருக்கோயிலில் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர
சரஸ்வதி சுவாமிகள்  அவர்களின்  பொன்விழாத்  திட்டத்தின்கீழ்   சுவாமி
அம்பாள் விமானங்கள் திருப்பணி செய்யப்பட்டு அவர்களின் ஆதரவாலேயே
விபவ  ஆண்டு   ஆவணி   22ஆம் நாள் (7-9-89) அன்று கும்பாபிஷேகம்
நடைபெற்றுள்ளது.

     ஊர்சிறியது. வெளியூரிலிருந்து செல்லும் பயணிகளுக்கு உணவு தங்கும்
வசதிகள் இங்குக் கிடைக்காது. காஞ்சிபுரத்திற்கே வரவேண்டும்.