பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 635


     அவ்வாறே மூழ்கிப் பலனைப் பெற்றாராம். இவ்வரலாற்றை
யொட்டித்தான் மக்கள் பேச்சு வழக்கில் இப்பகுதியை ‘குருவிராமேஸ்வரம்’
என்று கூறுகின்றனர். இதனால் இத்தீர்த்தமும் திரிவேணி சங்கமத்திற்கு
நிகராகவும், இதில் மூழ்குவோர்க்குப் பதினாறு மடங்கு (கங்கை, சேது) தீர்த்த
விசேஷப் பலனைத் தருவதால் இத்தீர்த்தம் “ஷோடசசேது” என்றும்
சொல்லப்படுகிறது.

     கோயிலின் முகப்பில் மேற்புறத்தில் இறைவன், இராமர், ஜடாயு,
விநாயகர், சுப்பிரமணியர் சுதை உருவங்கள் உள்ளன. வாயிலைக் கடந்தால்
நேரே மூலவர் தரிசனம் - உள் நுழைந்ததும் வலப்பால் சூரியன் சந்திரன்
திருமேனிகள். தலப்பதிகக் கல்வெட்டுள்ளது.

     உள்பிராகாரத்தில் நால்வர், விநாயகர், சுப்பிரமணியர், கஜலட்சுமி
சந்நிதிகள் உள்ளன. உள் மண்டபத்தில் வலப்பால் அம்பாள் சந்நிதி - தெற்கு
நோக்கி நின்ற திருக்கோலம்.

     நேரே மூலவர் அழகாகத் தரிசனம் தருகிறார். கோஷ்டமூர்த்தங்கள்
முன்பாக உள்ளன. நாடொறும் இருகால வழிபாடே. குருக்கள் வீடு
கோயிலுக்குப் பக்கத்தில் உள்ளது.

     “ஆராத இன்னமுதை அம்மான் தன்னை
          அயனொடும் மால் அறியாத ஆதியானை
     தாராரும் மலர்க் கொன்றைச் சடையான் தன்னைச்
          சங்கரனைத் தன்னொப்பார் இல்லான் தன்னை
     நீரானை காற்றானை தீயானானை
          நீள் விசும்பாய் ஆழ்கடல்கள் ஏழும் சூழ்ந்த
     பாரானை பள்ளியின் முக்கூடலானைப்
          பயிலாதே பாழே நான் உழன்றவாறே.”    (அப்பர்)

                                    - “பூவினிடை
     இக்கூடன் மைந்த இனிக் கூடல் என்றுபள்ளி
     முக்கூடல் மேவியமர் முன்னவனே.”      (அருட்பா)

அஞ்சல் முகவரி :-

     அ/மி. முக்கோணநாதர் திருக்கோயில்
     திருப்பள்ளி முக்கூடல்
     கேக்கரை அஞ்சல் - 610 002 (வழி) திருவாரூர்
     திருவாரூர் வட்டம் - திருவாரூர் மாவட்டம்.