| பிராகாரங்களையும் சேர்த்து ஐந்து பிராகாரங்கள், கிழக்குக் கோபுர வாயில் வழியாகச் செல்வோம். விநாயகர் முருகன் கோயில்கள் இருபுறமும் உள்ளே நுழைந்தால் வீதிவிடங்க விநாயகர் தரிசனம். பின்னால் பிரமநந்தி எழுந்தருளியுள்ளார். மழை வேண்டின் இப்பெருமானுக்கு நீர் கட்டுவதும், பசுக்கள் பால் கறக்க உதைத்தால் நன்கு கறக்க இவர்க்கு அறுகுசாத்தி அதைப் பசுக்களுக்குத் தருதலும் இன்றும் மக்களிடையேயுள்ள நம்பிக்கையும் பழக்கமுமாகும். அடுத்து பெரிய பிராகாரத்தில் வலமாக வந்தால் பக்தகாட்சி மண்டபம் (பங்குனி உத்திர விழா முடிந்து நடனக்கோலத்தில் தியாகராசர் எழுந்தருளுமிடம்) ; ஊஞ்சல் மண்டபம் (சந்திரசேகரின் ஊஞ்சல் உற்சவம் நடக்குமிடம்) காணலாம். அடுத்து ஆகாசவிநாயகர், துலாபார மண்டபம், சரஸ்வதி தீர்த்தம் முதலியவை உள்ளன. அடுத்துள்ளது சித்திரசபாமண்டபம் - பெரியது. இதன் பக்கத்தில் கோயில் ஓரமாகவிருப்பது சிறியது - புராணமண்டபம். அடுத்துக் கமலாம்பாள் சந்நிதி. பராசக்தி பீடங்களுள் ஒன்று. அம்பிகை தவக்கோலத்தில் தரிசனம் தருகின்றாள். ஆடிப்பூர விழா இச்சந்நிதியில் விசேஷம். பக்கத்தில் உச்சிட்ட பிள்ளையார் உள்ளார். மகாமண்டபம் தாண்டி உட் சென்றால் கமலாம்பிகை தரிசனம். நான்கு கரங்களுடன் (தாமரை, பாசம், அக்கமாலை, அமைந்தநிலை) யோகாசனத்தில் காட்சி தருகிறாள். அம்பாள் கோயிலின் மேற்கு மூலையில் அக்ஷரபீடமுள்ளது. இதில் பீடமும் ஐம்பத்தோரு எழுத்துக்கள் எழுதப்பெற்ற திருவாசியுமே உள்ளன. நின்று தியானித்துச் செல்லவேண்டும். அடுத்தாற்போல் சண்முகர், பாலசுப்பிரமணியர், கலைமகள், மகரிஷிகள் வழிபட்ட லிங்கங்கள் - சந்நிதிகள் உள்ளன. வெளிவந்தால் எதிரில் பார்ப்பதீச்சரம். இங்குள்ள தீர்த்தக் கிணறு ‘முத்திக்கிணறு’ எனப்படும். இதை மக்கள் உருமாற்றி ‘மூக்குத்திக் கிணறு’ என்றழைக்கிறார்கள். ஒட்டுத்தியாகர் கோயில் உள்ளது. சுந்தரரைக் கோயிலுள் போகாதவாறு விறன் மிண்டர் தடுக்க, இறைவன் இங்கு வந்து சுந்தரரை ஆட்கொண்டார் என்பர். “ஒட்டி ஆட்கொண்டு போய் ஒளித்திட்ட” என்னும் சுந்தரர் வாக்கு இங்கு எண்ணத்தக்கது. அடுத்துள்ளது, தேவாசிரியம் எனப்படும் ஆயிரக்கால் மண்டபம். செல்வத்தியாகர் ஆழித்தேர் விழா முடிந்து இம்மண்டபத்தில்தான் வந்து மகாபிஷேகம் கொண்டு-செங்கோல் செலுத்துவார். அதனால் இஃது ராஜதானி மண்டபம் என்று வழங்கப்படும். |