| “தேவாசிரியன் எனும் திருக்காவணம்” என்னும் சேக்கிழார் வாக்குக்கேற்ப இம்மண்டபத்தின் முன்னால் பந்தலிட பலகால்கள் நடப்பெற்றுள்ளமையைக் காணலாம். அடுத்துள்ள தீர்த்தம் - சங்க தீர்த்தம். இதில் இறங்கிக் கைகால் சுத்திசெய்து கொண்டு, ஆரியன் கோபுரம் வழியாக உட்செல்ல வேண்டும். கோபுர வாயிலில் இடப்பால் விறன்மிண்டர் காட்சி தருகிறார். இவரை வணங்கி வாயிலைக் கடந்து சென்றால் - இந்திரன் கொடி மரமும், ராஜநாராயண மண்டபமும் வரும். பங்குனி உத்திர விழா இறுதியில் பெருமான் இம்மண்டபத்தில் எண்ணெய்க் காப்பு கொள்வாராதலால் இதற்கு எண்ணெய்க் காப்பு மண்டபம் என்று பெயர். ராஜநாராயண சோழன் கட்டியது. இம்மண்டபத்தின் வலப்பால் விநாயகர், இடப்பால் துர்க்கை, அடுத்து ஜ்வரஹரேஸ்வரர், ஏகாதசருத்ரர் வழிபட்ட சிவலிங்கங்களை வழிபட்டுச் சென்று, அபிஷேகக் கட்டளை அறை, வாகன அறை, ராஜன் கட்டளை அறை இவைகளைக் கடந்து முசுகுந்தரைத் தொழுது, இந்திரலிங்கம் வணங்கி, அங்குள்ள சதுரக்கல்லின் மேல் நின்று ஏழுகோபுரங்களையும் ஒருசேர ஆனந்தமாகத் தரிசித்துப் பின்பு ஆரூர் அரநெறியை அடையவேண்டும். ஆரூர் அரநெறி : இஃது ஒரு தனிக்கோயில். அப்பர் பாடல் பெற்றது. இறைவன் - அகிலேஸ்வரர். இறைவி - வண்டார் குழலி, புவனேஸ்வரி. நமிநந்தியடிகள் வழிபட்டது. இக்கோயில் அசலேச்சரம் என்று வழங்கப்படுகிறது. இச்சந்நிதியில் சிவராத்திரி வழிபாடு விசேஷமானது. இப்பெருமானின் - அசலேசுவரரின் நிழல் கிழக்குத் திசையிலன்றி மற்றத் திசையில் விழுவதில்லை என்ற செய்தி தனி மகிமை வாய்ந்தது. இதை வழிபட்டு, தக்ஷேசவரர், மனுச்சக்ரேஸ்வரர், பகீரதேசுவரர், கைலாசத்தியாகர், பாண்டியநாதர், சப்தமாதர், சப்தரிஷீசுவரர், சேரநாதர் ஆகிய சந்நிதிகளை வழிபட்டு, ஆடகேசுவரத்தை அடையலாம். ஆடகேசுவரம் - அப்புத்தலம். இங்கொரு நாகபிலமுள்ளது. வழிபட்டு வலமாக வரும்போது தலமரம் - பாதிரி உள்ளது. வணங்கி, விசுவாமித்திரேசுவரர், புரூர்வசக்கரேசுவரர், மகாபலீசுவரர், ரௌத்திர துர்க்கை, அருணாசலேசுவரர், வருணேசுரவிநாயகர், வருணேசுரர் முதலிய மூர்த்தங்களைத் தொழுதவாறே ஆனந்தேஸ்வரத்தையடையலாம். |