வன்மீகநாதரின் சந்நிதியிலுள்ள நந்தியின் மேற்பரப்பிலுள்ள கல்லில் 27 நட்சத்திரங்களும் இராசிச் சக்கரமும் அமைந்துள்ளன. இத்தலத்து தேர் அழகுடையது - ஆழித் தேர் என்று பெயர். தியாகேசர் சந்நிதியில் தேர் வடிவில் ஒரு விளக்கு உள்ளது. பஞ்சமுக வாத்யம் சிறப்பானது - ஒன்று பாம்பு சுற்றியது போலவும், ஒன்று ஸ்வஸ்தி வடிவிலும், ஒன்று தாமரைப் பூப் போலவும், ஒன்று எவ்வித அடையாளமுமில்லாமலும், நடுவில் உள்ளது பெரியதாகவும் இருக்கும். மான் தோலால் கட்டப்பட்டது. இஃது, ஒவ்வொரு முகத்திலும் தனித்தனியாக அடிக்கப்படும்போது ஏழு முறையும், ஐந்திலும் சேர்ந்து அடிக்கும்போது முகத்திற்கு ஒன்றாக ஐந்து முறையும் அடிக்கப்படும். இங்கு வாசிக்கப்படும் நாதஸ்வரம் - மிகப் பெரியது. நாடொறும் ஆறு கால பூஜைகள். பங்குனிப் பெருவிழாவும் சித்திரை வசந்தோற்சவமும் ஆடிப்பூரமும் சிறப்புடையன. எல்லா விழாக்களும் மாதாந்திர உற்சவங்களும் முறையாக நடைபெறுகின்றன. இக்கோயிலில் மட்டுமே செய்யப்படும் முசுகுந்த சஹஸ்ரநாம அர்ச்சனைக்கு ரூ. 3,500/- கட்டளையாகும். இவ்வர்ச்சனை ஆண்டுதோறும் தைமாதத்தில் தியாகராஜாவுக்குக் கோயிலில் செய்யப்படுகிறது. இக்கோயிலில் உள்ள மிகப் பெரிய கட்டளைகளுள் மிகப் பெரியது அபிஷேகக்கட்டளை. அடுத்தது ராஜன் கட்டளை. ராஜன் கட்டளை தருமையாதீனத்தின் பொறுப்பில் உள்ளது. இவற்றைத் தவிர அன்னதானக் கட்டளை, உள்துறைக் கட்டளை முதலிய பலவும் உள்ளன. தியாகராஜ லீலை - மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பாடியது. அஜபாரஹஸ்யம், தியாகராய லீலை, தியாகராஜபுர மான்மியம் முதலாக 16 நூல்கள் இத்தலத்தைப் பற்றி சம்ஸ்கிருதத்தில் உள்ளன. கீழ்க்கோபுரத்திற்கு இடப்புறத்தில் ஆரூரான் கல்யாண மண்டபம் கட்டப்பட்டுள்ளது. கமலாலயக் கரையில் வடபால் பச்சையப்ப முதலியார் சத்திரமுள்ளது. வடகரையில் திருவாவடுதுறை ஆதீன மடமும் தெற்கு வீதியில் தருமையாதீன ராஜன்கட்டளை மடமும் உள்ளன. இக்கோயிலில் 65 கல்வெட்டுக்கள் உள்ளன. இவை பெரும்பாலும் சோழர் காலத்தியவை. செம்பியன்மாதேவி ஆரூர் அரநெறிக் கோயிலைக் கட்டியதாகக் கல்வெட்டு தெரிவிக்கிறது. ஆண்டொன்று ஐம்பத்தாறு திருவிழாக்கள் நடைபெற்றனவாம். |