தன் மூக்கால் பிளந்து வெளிப்படுத்திய கருடன், இறையருளால் இக்கோயிலைக் கட்டி வழிபட்டார் என்பது வரலாறு. சூரியன் வழிபட்டமையால் ‘சூரியேசுவரர்’ என்றும், தாலப்பிய முனிவர் வழிபட்டதால் ‘தாலப்பியேசுவரர்’ என்றும், பிருகுமுனிவர் வழிபட்டதால் ‘பிருகநாதர்’ என்று சுவாமிக்குப் பல பெயர்களுண்டு. தாலப்பிய முனிவர் இத்தலத்து மந்தார மரத்தின் கீழிருந்து தவஞ்செய்ததாக வரலாறு. குடத்திலிட்டுக் காத்த உயிர்களை, மீண்டும் படைப்புக் காலத்து வெளிப்படுத்தத் தொடங்கிய போது குடம் மூன்றாக உடைந்து, முதற்பாக மாகிய அடிப்பாகம் விழுந்த இடத்தில் இறைவன் திருமேனி கொண்டார். அதுவே குடமூக்கு எனப்படும் கும்பகோணம் (ஆதிகும்பேசம்) ஆகும். அடுத்து நடுப்பாகம் விழுந்த இடமே கலையநல்லூராகும். குடத்தின் முகப்பு (வாயில்) பாகம் விழுந்த இடமே குடவாயிலாகும் என்பது தலவரலாறு. இத்தலத்து திருண பிந்து முனிவர் வழிபட, இறைவன் காட்சி தந்து அவருடைய உடற்பிணியைத் தீர்த்தருளியதாகவும் வரலாறு. இத்தலத்திற்குப் பக்கத்தில் சுற்றிலும் திருச்சேறை, கரவீரம், பெருவேளூர், தலையாலங்காடு, கடுவாய்க்கரைப்புத்தூர், கொள்ளம்பூதூர், நாலூர் மயானம் முதலிய தலங்கள் உள்ளன. கதலிவனம், வன்மீகா சலம் என்பன தலத்திற்குரிய வேறு பெயர்கள். இத்தலம் சங்ககாலச் சிறப்பும் பழைமையும் வாய்ந்தது. சோழன் கோச்செங்கணான், சேரமான் கணைக்கால் இரும்பொறையை வென்று, அவனை இக்குடவாயிற் சிறைக் கோட்டத்தே சிறை வைத்தான் என்னும் செய்தி புறநானூற்றில் தெரிகிறது. இதனால் அன்றைய குடவாயில், சோழப் பேரரசின் சிறைக்கோட்டமாக இருந்ததெனத் தெரிகின்றது. குடவாயில் கீரத்தனார், குடவாயில் நல்லாதனார் போன்ற புலவர்கள் பாடியுள்ள பாடல்கள் அகநானூறு முதலிய சங்க இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன. அகநானூற்றில் வரும் செய்தி ஒன்றால், சங்ககாலத்தில் குடவாயில் சோழர்களின் கருவூல நிலையமாக இருந்ததென்று அறிய முடிகிறது. கல்வெட்டுச் சிறப்பு உடைய தலம். இஃது மூன்று கல்வெட்டுக்கள் படியெடுக்கப்பட்டுள்ளன. மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் கல்வெட்டில், இறைவன் பெயர் ‘குடவாயில் உடையார்’ என்றும், இறைவி பெயர் ‘பெரிய நாச்சியார்’ என்றும், கோயிலின் பெயர் ‘பெருந்திருக்கோயில்’ என்றும் குறிக்கப்பட்டுள்ளது. இத்தலத்தில் சனிபிரதோஷம் மிகச்சிறப்பு வாய்ந்ததாகும். |