பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 657


     இத்தலத்திலுள்ள ஏகபாதர் உருவம் - அரி அயன் அரன் மூவரும்
ஒற்றைத் திருவடியில் ஒரு வடிவாய் நிற்கும் சிற்பம் ஏகபாத்திரமூர்த்தி மிகவும்
அற்புதமானது. அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியது. அம்பிகையே
பிருகத்துர்க்கையாக வழிபடப் பெறுவதால் கோயிலில் தனி துர்க்கையில்லை,
தலபுராணம் உள்ளது. ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ
சங்கராசார்ய ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களின் பொன்விழா
ஆண்டுத் திருப்பணித் திட்டத்தில் திருப்பணிகள் செய்யப்பட்டு அவர்களின்
அருளாசியால் 27-6-85ல் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.

     இத்தலத்தில் உள்ள கோணேசர் வார வழிபாட்டுக் கழகம்
ஆலயத்தின்பால் மிக்க பற்று கொண்டு பணிகளையும் வழிபாட்டையும் செய்து
வருகின்றது. மாசி மகத்தில் பெருவிழா நடைபெறுகின்றது.

    
 “பொன்னொப் பவனும் புயலொப் பவனும்
     தன்னொப் பறியாத் தழலாய் நிமிர்ந்தான்
     கொன்னற் படையான் குடவாயில் தனில்
     மன்னும் பெருங்கோயில் மகிழ்ந்தவனே.”   (சம்பந்தர்)


                   
கோணேசர் துதி

    
 “சீர்கொண்ட வெளி முகடு கடந்தண்டத்
          தப்பாலாய்ச் சித்தாந்தத்தின்
     வேர்கொண்ட பேரொளியாய்ச் சின்மயமா
          யகண்டமாய் விமலமாகிப்
     பேர்கொண்ட நாதமாய் விந்துவா
          யைந் தொழிலும் பிறங்கச் செய்து
     பார்கொண்ட குடவாயி லமர்ந்த கோ
          ணேசர் பதம் பணிந்து வாழ்வோம்.” (தலபுராணம்)

                 
பெரியநாயகி துதி

    
 “பரையாகி இச்சா ஞானங் கிரியை
          அதிகாரப் பான்மையெய்திப்
     புரைதீர்ந்து விந்து மோகினி யொடுமா
          னனைத்துலகும் பொருந்தச் சார்ந்து
     கரை தீர்க்குஞ் சமய வித சத்தியமாய்க்
          காணமுக்கட் கடவுளாகித்
     தரைமேவும் குடவாயில் வரும் பெரிய
          நாயகிதாடலைமேற் கொள்வோம்.”   (தலபுராணம்)


தலம் - 42