நிலை. விஷ்ணுதுர்க்கை அமைப்பு நின்ற நிலையினதாயினும் அழகான வேலைப்பாடு - இரு திருவடிகளுள் ஒன்றை பாத அளவில் மடித்து ஒன்றால் கீழேயுள்ள மகிடத்தை ஊன்றி, (குழலூதும் கண்ணன் நிற்கும் அமைப்பில்) நிற்கும் அற்புதமான திருக்கோலம். பைரவர் சந்நிதி உள்ளது. வாயிலின் இருபுறமும் சூரிய சந்திரர்கள் உளர். அம்பாள் சந்நிதி - நின்ற திருக்கோலம், அபய வரதத்துடன் கூடிய நான்கு திருக்கரங்கள். இச்சந்நிதிக்குப் பக்கத்தில் தனியே உள்ள மண்டபத்தில் வள்ளி தெய்வயானையுடன் கூடிய சுப்பிரமணியர் சந்நிதி கம்பீரமாக உள்ளது. சித்திரை மாதத்தில் பத்து நாள்களுக்குப் பெருவிழா நடைபெறுகிறது. இது தவிர, ஆருத்ரா, சஷ்டி, நவராத்திரி முதலிய விழாக்களும் நடைபெறுகின்றன. கல்லாற்றின் கரையில் உள்ள கோயில் - ஜலகண்டேஸ்வரர் (கங்காதரேஸ்வரர்) கோயில் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. பூஜைகளில்லை. இதன் மேற்கில் உள்ளது சத்திய கங்கை தீர்த்தம். கிழக்கில் உள்ள நந்தி வாயிலிருந்து ஒரு காலத்தில் நீர் விழுந்து கொண்டிருந்தது. தற்போது நின்றுவிட்டது. நந்தி வாயிலிருந்து விழும் நீர், சிவலிங்கத்தைச் சுற்றிச் சென்று வெளியில் வந்து, மீண்டும் மற்றொரு நந்தி வாயிலிருந்து விழுந்து, குளத்தில் நிரம்பி பின்னர் ஆற்றில் ஓடும் அமைப்பில் இது அமைந்துள்ளது. இப்போதும் ஆற்றில் நீர்ப்பெருக்கு உண்டாயின் அப்போது நந்தி வாயில் நீர் விழும் என்று சொல்கிறார்கள். இக்கோயிலில் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களின் பொன் விழாத் திட்டத்தின் கீழ் திருப்பணிகள் நடைபெற்று மகா கும்பாபிஷேகம் நடந்துள்ளது. சித்தாந்த சரபம் அஷ்டாவதானம் பூவை கல்யாண சுந்தர முதலியார் இத்தலத்திற்குத் தலபுராணம் பாடியுள்ளார். “மாறில் அவுணர் அரணம் அவைமாய ஓர் வெங்கணையாலன்று நீறெழ எய்த எங்கள் நிமலனிடம் வினவில் தேறலிரும் பொழிலுந் திகழ் செங்கயலும்பாய் வயலுஞ்சூழ்ந்த ஊறல் அமர்ந்த பிரான் ஒலியார் கழல் உள்குதுமே.” “கறுத்த மனத்தினொடுங் கடுங்காலன் வந்தெய்துதலுங் கலங்கி மறுக்குறு மாணிக்கருள மகிழ்ந்தானிடம் வினவில் செறுத்து எழு வாள்அரக்கன் சிரந்தோளும் மெய்யுந்நெரியஅன்று ஒறுத்தருள் செய்தபிரான் திருவூறலை உள்குதுமே.” (சம்பந்தர்) |