பக்கம் எண் :

672 திருமுறைத்தலங்கள்


     பரிதி - சூரியன். நியமம் - கோயில். ஒருகாலத்தில் சூரியன் கோயிலாக
இருந்து பின்பு சிவாலயமாக மாறியிருக்கலாம் என்பர். சூரியன் வழிபட்ட தலம்
- சூரியன் வழிபடும் உருவம் கோயிலில் உள்ளது. பரிதிவனம், பரிதிகேசுவரம்
என்பன வேறு பெயர்கள்.

     இறைவன் - பாஸ்கரேஸ்வரர், பரிதியப்பர்.
     இறைவி - மங்களாம்பிகை, மங்களநாயகி
     தலமரம் - அரசமரம் - (இத்தலத்திற்கு அரசவனம் என்றும்
              பெயர்)
     தீர்த்தம் - சூரிய தீர்த்தம், சந்திரதீர்த்தம். (சூரிய தீர்த்தம்
             கோயிலின் முன்பும் சந்திரதீர்த்தம் பின்பும் உள்ளது.)

     சம்பந்தர் பாடல் பெற்றது.

     பழைமையான கோயில் - கிழக்கு நோக்கியுள்ளது. ஐந்து நிலை
ராஜகோபுரம். இரண்டாம் கோபுரம் மூன்று நிலை. முதல் கோபுரம், உள்ளே
நுழைந்ததும் கொடிமரம், விநாயகர், நந்தி, பலிபீடம், வசந்த மண்டபத்திற்குப்
பக்கத்தில் அம்பாள் கோயில் தெற்கு பார்த்து உள்ளது. இரண்டாங் கோபுர
வாயிலைக் கடந்து பிராகாரத்தில் வந்தால் விநாயகர், முருகன், கஜலட்சுமி
சந்நிதிகளைத் தரிசிக்கலாம். நடராச சபை உள்ளது. அருகில் பைரவர்,
சூரியன், சந்திரன், நவக்கிரகங்கள் உள்ளன. இங்குள்ள முருகப் பெருமான்
சிறந்த வரப்பிரசாத மூர்த்தியாக வழிபடப் பெறுகின்றார்.

     துவாரபாலகர்களையும் விநாயகரையும் தொழுது உட்சென்றால் சுயம்பு
மூர்த்தமாகத் திகழ்கின்ற மூலவரைத் தரிசிக்கலாம். மூலவருக்கு எதிரில் நந்தி,
பலிபீடம் - அடுத்துச் சூரியன் வழிபடும் நிலையில் உருவம் உள்ளது.
சண்டேசுவரர் சந்நிதியில் மூன்று திருமேனிகள் உள்ளன. கோயிலுக்குத்
தென்பால் பிடாரி கோயில் உள்ளது. கோயிலருகில் இடும்பன் கோயிலும்
உள்ளது. ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திரசரஸ்வதி
சுவாமிகள் அவர்களின் பொன்விழாத் திட்டத்தின் மூலம் திருப்பணிகள்
செய்யப்பட்டுள்ளன. நாடொறும் நான்கு கால வழிபாடுகள். பிரதோஷ
வழிபாடு நடைபெறுகிறது. இக்கோயில் தஞ்சை மாவட்டம் கீழ்வேங்கை
நாட்டாருக்கும் சொந்தமானது. பங்குனித்திங்கள் 17, 18, 19 நாள்களில் சூரிய
ஒளி சுவாமி மீதுபடுகிறது. சூரியன் வழிபட்ட 7 தலங்களுள் இதுவும் ஒன்று.
ஏனையவை 1. திருக்கண்டியூர் 2. வேதிகுடி 3. குடந்தைக்கீழ்க் கோட்டம்
4. தெளிச்சேரி 5. புறவார் பனங்காட்டூர் 6. நெல்லிக்கா.