பக்கம் எண் :

678 திருமுறைத்தலங்கள்


     துர்க்கை, பிரம்மா, அர்த்தநாரீஸ்வரர், பிட்சாடனர், சண்டேஸ்வரர்
சிலாரூபங்கள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. வள்ளி தெய்வயானையுடன்
சுப்பிரமணியர், பசுபதீஸ்வரர், பைரவர், நவக்கிரகங்கள், சூரியன் சந்நிதிகள்
உள்ளன.

     படிகளேறி மண்டபம் அடைந்தால் நடராசர் தரிசனம். அடுத்துள்ள
மண்டபத்தில் சோமாஸ்கந்தர் சந்நிதி உள்ளது. இங்குத் தியாகராஜா
இருப்பதாக ஐதீகமாதலால் எதிரில் செப்பாலான நந்தி உள்ளது. துவார
பாலகரைக் கடந்து சென்றால் மூலவர் தரிசனம். மூலவருக்கு முன்னால்
பித்தளையாலான கோபுர அமைப்பு செய்து வைக்கப்பட்டுள்ளது. கோஷ்ட
மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர், பிரம்மா,
அர்த்தநாரீஸ்வரர், துர்க்கை, பிட்சாடனர் ஆகியோர் உளர். சண்டேஸ்வரர்
உள்ளது.

     நாடொறும் ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன. தைப்பூசம்,
மாசிமகம், ஆவணிமூலம் ஆகிய விசேஷ நாள்களில் சுவாமி புறப்பாடாகி
‘கிருஷ்ணகுஷ்ட ஹர’ தீர்த்தத்தில் இறங்கித் தீர்த்தம் தரும் மரபு
நடைபெறுகின்றது.

     வைகாசி விசாகத்தில் பெருவிழா நடைபெறுகிறது. சாமுண்டீஸ்வரி
அம்பிகைக்குச் சித்திரையில் அமாவாசையில் காப்புகட்டிப் பத்து நாள்களுக்கு
விழா தனியாக நடைபெறுகிறது.

     
“பூவனூர்ப் புனிதன் திருநாமந்தான்
     நாவினூறு நூறாயிர நண்ணினார்
     பாவமாயின பாறிப் பறையவே
     தேவர் கோவினுஞ் செல்வர்களாவரே."           (அப்பர்)

                                      - “காட்டியநம்
     தேவனூர் என்று திசைமுகன் மால்வாழ்த்துகின்ற
     பூவனூர் மேவும் புகழுடையோய்”           (அருட்பா)


அஞ்சல் முகவரி:-

     அ/மி. புஷ்பவனநாதர் திருக்கோயில்
     பூவனூர் & அஞ்சல் - 612 803
     திருவாரூர் மாவட்டம்.