பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 681


     நாடொறும் இருகால வழிபாடு நடைபெறுகிறது. கார்த்திகை
சோமவாரங்கள், கடைசி சோமவாரத்தன்று 108 கலசாபிஷேகம் விசேஷம்,
ராஜராஜசோழன் காலக் கல்வெட்டில் இத்தலம் சுற்ற வேலி வளநாட்டு
பாம்பணி கூற்றத்துப் பாமணி என்று குறிக்கப்படுகிறது.

     “அங்கமு(ம்) நான்மறையும் அருள் செய்தழகார்ந்த அஞ்சொல்
     மங்கையோர் கூறுடையான் மறையோன் உறைகோயில்
     செங்கயனின்றுகளுஞ் செறுவிற்றிகழ்கின்ற சோதிப்
     பங்கய(ம்) நின்றலரும் வயல்சூழ்ந்த பாதாளே.”    (சம்பந்தர்)

     (சம்பந்தர் பாட்டில் பாதாளேச்சுரம் என்று குறிக்கப்படும் பெயர்
பிற்காலத்தில் சுந்தரர் வாக்கில் பாம்பணி என்று மாறி வருவதை
நோக்குங்கால் அக்காலத்திலே இப்பெயர் மாறிப்போய் விட்டிருப்பதை
அறியமுடிகிறது.)

                                    
     - “பூவுலகாம்
     ஈங்கும் பாதாளமுதல் எவ்வுலகும் எஞ்ஞான்றும்
     தாங்கும் பாதாளேச்சரத்து அமர்ந்தோய்.”           (அருட்பா)

அஞ்சல் முகவரி:-

     அ/மி. சர்ப்பபுரீஸ்வரர் திருக்கோயில்
     பாமணி & அஞ்சல் - 614 014
     (வழி) மன்னார்குடி - மன்னார்குடி வட்டம்
     திருவாரூர் மாவட்டம்.

222/105. திருக்களர்

     சோழநாட்டு (தென்கரை)த் தலம்.

     திருத்துறைப்பூண்டி - மன்னார்குடி சாலையில் சென்று இத்தலத்தை
அடையலாம். மன்னார்குடியிலிருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ளது. பேருந்து
வசதியுண்டு.

     பராசர முனிவர், காலபைரவர், துர்வாசர் முதலியோர் வழிபட்டுப் பேறு
பெற்ற தலம். இத்தலத்திற்குப் பாரிஜாதவனம் தருவனம், கற்பகவனம் என்னும்
பெயர்களுண்டு.