பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 683


     கீழ்க்கோடியில் அஷ்டபுஜ துர்க்கை சந்நிதி உள்ளது. சுவாமி, அம்பாள்
சந்நிதிகளுக்கு மத்தியில் தல விருக்ஷம் உள்ளது. கல்வெட்டில் சுவாமியின்
பெயர் - களர் முளைத்த நாயனார், அடைந்தார்க்கு அருள் செய்த நாயனார்
- என்று குறிக்கப்படுகின்றது. ஞான சம்பந்தர் தம் பதிகத்தில் ‘அடைந்தார்க்கு
அருளாயே’ என்று பாடுவது இங்கு நினைக்கத்தக்கது.

     வலம்புரி விநாயகர் சந்நிதியில் - கோபுரத்திற்கு உள்புறத்தில் அகோர
வீரபத்ரர் மேற்கு நோக்கி வீரமுடன் காட்சி தருகின்றார். ‘விடங்கர் லிங்கம்’
நடராஜருக்குப் பக்கத்தில் பேழையில் உள்ளது. நடராஜர் (பிரபையுடன்)
அழகாகத் தரிசனம் தருகின்றார் - அற்புதத் தரிசனம். ஆண்டுக்கொருமுறை
ஆதிரையில் மட்டும் புறப்பாடு. இங்குள்ள தீர்த்தங்களுள் துர்வாச தீர்த்தமே
சிறப்புடையது. மற்றையவை (1) பிரமதீர்த்தம் (சிந்தாமணி தீர்த்தம் ) (தெற்கு
வீதியில் உள்ளது)

     (2) ருத்ரதீர்த்தம் (மேல வீதியில் உள்ளது)

     (3) ஞானதீர்த்தம் (வடக்கு வீதியில் உள்ளது)

     சுவாமிக்குச் செய்துள்ள திருப்பணிகளுள், திருக்களர் ஆண்டவர்
செய்துள்ள திருப்பணிகளே சிறப்பானவை. பூஜைகள் செம்மையாக முறையாக
நடைபெறுகின்றன. சிறப்பான உற்சவங்களும் அவ்வப்போது உரிய காலங்களில்
நடத்தப் பெறுகின்றன. மாசி மாதத்தில் (மகத்தில்) சிந்தாமணி தீர்த்தத்திலும்
பங்குனி உத்திரத்தில் ருத்ர தீர்த்தத்திலும் நடைபெறும் தீர்த்தவாரி சிறப்பு.

     அம்பாளுக்கு முழு உருவத்திற்குமாக ஓர் அன்பின் உபயமாகத் தங்கக்
கவசங்கள் செய்யப்பட்டு, விசேஷ காலங்களில் மட்டும் சார்த்தப்பட்டுப்
பாதுகாக்கப்பட்டு வருகின்றன. தங்கக்கவசக் காட்சியைக் காணக் கண்கோடி
வேண்டும் - அற்புதமான ஆனந்தக் காட்சி. மனதிற்குப் பெரும் நிறைவைத்
தருகின்றது. அழகேஸ்வரிக்கு அழகான அலங்காரம். இத்தலத்திற்குத்
தலபுராணம் உள்ளது - இயற்றியவர் களப்பால் என்னும் ஊரில் வாழ்ந்த
ஆதியப்பர்.

     
“நீருளார் கயல் வாவி சூழ்பொழில்
          நீண்ட மாவயலீண்டு மாமதில்
     தேரினார் மறுகில்
          விழா மல்கு திருக்களர்
     ஊருளாரிடு பிச்சை பேணும்
          ஒருவனே ஒளிர் செஞ்சடைம்மதி
     ஆர நின்றவனே
          அடைந்தார்க்(கு) அருளாயே.”           (சம்பந்தர்)