பக்கம் எண் :

684 திருமுறைத்தலங்கள்


                               - “ஓங்குபுத்தி
     மான்களரிலோட்டி மகிழ்வோ டிருந்தேத்தும்
     வான்களரில் வாழு மறை முடிபே”           (அருட்பா)

அஞ்சல் முகவரி:-

     அ/மி. பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோயில்
     திருக்களர் & அஞ்சல் - 614 720
     திருவாரூர் மாவட்டம்.

223/106. திருச்சிற்றேமம்

சிற்றாய்மூர் - சித்தாய்மூர்

     சோழநாட்டு (தென்கரை)த் தலம்.

     மக்கள் சித்தாய்மூர் என்று அழைக்கின்றனர். திருவாரூர் - திருத்துறைப்
பூண்டி சாலையில் ஆலத்தம்பாடி வந்து, அங்கிருந்து சித்தாய்மூர் செல்லும்
பாதையில் 3 கி.மீ. நடந்து செல்ல வேண்டும். இத்தலத்திற்கு வருவோர்
கூட்டமாகத் தனிப் பேருந்தில் வந்து தரிசிப்பதே சிறந்தது. அரிச்சந்திர
நதியின் வடபால் உள்ள தலம். ஊர் அருகில் செண்பகநதி உள்ளது.
பிரமரிஷி, சித்தர்கள் வழிபட்ட தலம்.

     இறைவன் - சுவர்ண ஸ்தாபனேஸ்வரர், பொன் வைத்தநாதர்
     இறைவி - அகிலாண்டேஸ்வரி
     தலமரம் - ஆத்தி
     தீர்த்தம் - சுவர்ண புஷ்கரணி.
     தலவிநாயகர்- ஆத்திமர விநாயகர்

     சம்பந்தர் பாடல் பெற்றது.

     அழகான ராஜகோபுரம். கிழக்கு நோக்கியது. திருச்சிற்றேமத்திற்கு
வடபாலுள்ள முத்தரசபுரத்தை ஆண்டு வந்து மன்னனுக்கு நாடொறும் இவ்வூர்
வழியாகப் பாற்குடம் செல்வது வழக்கம். சில நாள்களில் அப்பாற்குடம் ஒரு
குறிப்பிட்ட இடத்தில் விழுந்து உடையலாயிற்று. அரசன் அவ்விடத்தை
வெட்டிப் பார்க்க, சிவலிங்கத் திருமேனி கண்டான். அவ்விடத்துக் கோயில்
எழுப்பினான் என்பது வரலாறு. இதற்கு அடையாளமாக சிவலிங்கத்தின்மீது
வெட்டுக்காயம் உள்ளது.