பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 685


     நடராசர் அழகான வடிவம். பிராகாரத்தில் கன்னிவிநாயகர், முருகன்,
மகாலட்சுமி சந்நிதிகள் உள. பிரமரிஷி, ஐயனார், பைரவர், சனிபகவான்,
சூரியன், விசுவநாதர் சந்நிதிகள் தரிசிக்கத்தக்கவை. தலப்பதிகம் அம்பாள்
சந்நிதி முன்பு பதிக்கப்பட்டுள்ளது.

     வேலவர், சோமாஸ்கந்தர், ஆடிப்பூர அம்மன், பிரதோஷநாயகர்,
சந்திரசேகரர் மற்றும் தலவரலாற்றுடன் தொடர்புடைய செட்டியார், அவர்
மனைவி ஆகியோர், சம்பந்தர் முதலியோரின் உற்சவத் திருமேனிகள்
உள்ளன.

     தலவரலாறு:- இவ்வூரில் வாழ்ந்த சங்கரன் செட்டியார், மனைவி
கருவுற்ற மிக்க அண்மைக் காலத்தே பொருளீட்டும் முயற்சி மேற்கொண்டு
வெளியூர் சென்றார். சிவப்பற்று கொண்டு, சிவத் தொண்டு செய்து வாழ்ந்து
வந்து அம்மங்கைக்கு இறைவன் நாடொறும் ஒரு பொன் காசுவைத்து உதவ,
அவள் அதை விற்று வாழ்வு நடத்தி வந்தாள். மகப்பேறு காலம் நெருங்கியது.
இறைவனை நோக்கி அழுது வேண்ட, அகிலாண்டேஸ்வரியே தாயாக வந்து
உதவிட, மகவினைப் பெற்றெடுத்தாள். செட்டியார் ஊர் திரும்பினார்.
புல்லறிவினர் சிலர் அம்மாதின்மேல் பொய்ஒழுக்கக் குற்றச்சாட்டுக்களைச்
செட்டியாரிடம் கூறினர். அம்மங்கை இறைவனிடம் சென்று பல்லோர்
முன்னிலையிலும் வேண்டி, தன் கற்பை வெளிப்படுத்துமாறு கலங்கி வேண்ட,
இறைவன் - கோயிற்கதவைத் தானே திறக்கச் செய்தும், ஆத்திமரத்தை இடம்
பெயர்ந்து முன்புறம் வரச்செய்தும், நந்திதேவரைப் பலிபீடத்தின் பின் போகச்
செய்தும் - பல அற்புதங்களை நிகழ்த்தி அப்பெண்ணின் கற்புத்திறத்தை
ஊரறியச் செய்தார் என்பர்.

     இவ்வூரின் மேற்கே 6 கி.மீ. தொலைவிலுள்ள இடம் - செட்டிப்
பெண்ணிற்கு இறைவன் அன்றாடம் பொன் நிறுத்துத்தந்த இடமாகும். (பொன்
+ நிறை) - ‘பொன்னிறை’ என்னும் பெயருடையது.

     இக் கோயிலில் உள்ள தேன்கூடு வியப்பானது. இது பற்றிய ஒரு
செய்தி:- நாடொறும் அர்த்த சாமத்தில் வழிபட்டு வந்த பிரமரிஷி ஒருநாள்
காலம் தாழ்ந்து வர, ஆலயக்கதவு காப்பிடப்பட்டுவிட்டது. அப்போது அவர்
தேனீ உருக்கொண்டு உள்ளே சென்று பெருமானை வழிபட்டு அங்கேயே
வசிக்கத் தொடங்கினார் என்பர். உற்சவங்களும் பூஜைகளும் முறையாக
நடைபெறுகின்றன.

    இத்திருக் கோயிலின் பக்கத்தில் திருமால் ஆலயமுள்ளது. இவ்வூர்க்குக்
கிழக்கில் திருவாய்மூரும், மேற்கில் கைச்சினமும், வடக்கில் வலிவலமும்
திருக்குவளையும் குண்டையூரும், வடகிழக்கில் எட்டுக்குடியும் உள்ளன.