| தொடர்ந்து சுப்பிரமணியர், நவக்கிரகங்கள், வியாக்ரபாதர், பதஞ்சலி ஆகியோர் பூசித்த சிவலிங்கங்கள், சூரியன், சந்திரன் முதலிய சந்நிதிகளும் உள்ளன. கருவறை முன்மண்டபத்தில் கோச்செங்கட்சோழன், அரிவாட்டாய நாயனார், நால்வர் மூலத்திருமேனிகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. துவார பாலகர்களைத் தொழுது, விநாயகரை வணங்கி உட்செல்லும் போது, மேற்புறத்தில் இருமருங்கும் அரிவாட்டாய நாயனார் - அலர் மனைவி அரிசியும் மாவடுவும் கொட்டுவது இறைவனின் திருக்கரம் வெளிப்பட்டு நாயனாரைத் தடுப்பது, நாயனாருக்கும் மனைவியாருக்கும் இறைவன் ரிஷபாரூடராகக் காட்சி தருவது முதலியவை சிற்பங்களாகக் கல்லில் வடிக்கப்பட்டுள்ளதைக் கண்டு மகிழலாம். உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் நடராசர், நால்வர், மனைவியுடன் அரிவாட்டாய நாயனார், கோச்செங்கட்சோழன் ஆகிய திருமேனிகள் சிறப்புடையவை. நடராசசபை வலப்பால் உள்ளது. சிவகாமி, மாணிக்கவாசகர், பதஞ்சலி, வியாக்ரபாதர் திருமேனிகள் உள்ளன. மூலவர் - சிவலிங்கம் அழகான சிறிய திருமேனி. அம்பாள் சந்நிதி அழகாகவுள்ளது. சுவாமிக்கு வெள்ளியிலான நாகாபரணமும், அம்பாளுக்கு வெள்ளிக் கவசமும் பொன்னாலான செவ்வந்திப்பூ மாலையும் சார்த்தித் தரிசிக்கும்போது உண்டாகும் ஆனந்தத்திற்கு அளவேயில்லை. கோஷ்டமூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, துர்க்கைச் சந்நிதிகள் உள்ளன. துர்க்கைச் சந்நிதி, தனியாக விமானங் கட்டப்பட்டுப் பொலிவுடன் திகழ்கிறது. பிற்காலப் பணி. நாடொறும் நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன. தை மாதத்தில் பெருவிழா 3 நாள் உற்சவமாக நடைபெறுகிறது. நடராசர் அபிஷேகங்களும் மாதாந்திரக் கட்டளைகளும் நடைபெறுகின்றன. அரிவாட்டாய நாயனார் குருபூசை ‘அறுப்புத் திருவிழா’வாகப் பெருவிழாவில் உரியமுறைப்படி நடத்தப்படுகிறது. படிக்காசுப் புலவர் இத்தலத்து இறைவன்மீது ‘தண்டலையார் சதகம்’ பாடியுள்ளார். பக்கத்தில் உள்ள பாடல்பெற்ற தலங்கள் திருச்சிற்றேமம். திருவாய்மூர், திருக்குவளை, திருக்களர் முதலியன. ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களின் பொன்விழாத் திருப்பணித் திட்டத்தில் இக்கோயிலின் சுவாமி அம்பாள் |