பக்கம் எண் :

700 திருமுறைத்தலங்கள்


     பிருங்கி முனிவர் வண்டு உருவில் இறைவனின் திருமேனியின்
இடையில் துளைத்துச் சென்று அவரை மட்டும் வலம் வந்தமையால்,
அம்பிகை சாபம் தர, வண்டு உருவில் இருந்து இங்கு வழிபட்டார் என்பது
வரலாறு. கருவறையில் வண்டின் ரீங்கார ஒலி கேட்பதாகப் பண்டை
நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் தற்போது கேட்கவில்லை.
வித்யாதரர், பிரமன், துருவன், திருமால் ஆகியோர் வழிபட்ட தலம்.

     இறைவன் - மதுவனேஸ்வரர், பிரமரேஸ்வரர், பிரமபுரீசர், 
                வெண்டுறைநாதர்.     
      இறைவி - சத்யதாயதாக்ஷி, பிரஹதாம்பாள், வேல்நெடுங்கண்ணி
     தலமரம் - வில்வம்
     தீர்த்தம் - பிரம தீர்த்தம்

     சம்பந்தர் பாடல் பெற்றது.

     இராசகோபுரம் மூன்று நிலைகளையுடையது. கிழக்கு நோக்கிய
கோயில். கோயிலின் வடபால் தாமரைக் குளம் உள்ளது. வாயிலைக் கடந்து
சென்றால் கொடிமரமில்லை - பீடம் மட்டுமுள்ளது. பலிபீடம் நந்தி உள்ளன.

     பிராகாரத்தில் ‘மதாபோத கணபதி’ சந்நிதியும், சுப்பிரமணியர்
சந்நிதியும் உள. சுற்று மதிலுடன் தரை தளவரிசையிடப்பட்டு வலம்
வருவதற்கு வசதியாகவுள்ளது.

     இங்குப் பிட்சாடனர் மூலத் திருமேனி, பிராகாரத்தில் உள்ளது.
தரிசிக்கத் தக்கதும் விசேஷமானதுமாகும். கருவறை முன் மண்டபத்தில்
அம்பாள் சந்நிதி வலப்பால் உள்ளது. நின்ற திருக்கோலம். நேரே மூலவர்
தரிசனம் அழகிய சிவலிங்கத் திருமேனி. நடராச சபையுள்ளது.

     கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, அர்த்த
நாரீஸ்வரர் (ரிஷபத்தின்மீது கை ஊன்றிய நிலையில்), பிரம்மா, துர்க்கை
ஆகியோர் உள்ளனர். சண்டேஸ்வரர் சந்நிதி உள்ளது. நாடொறும் நான்கு
கால வழிபாடுகள் நடைபெறுகின்றன.

     
“ஆதியன் ஆதிரையன் அனலாடிய ஆரழகன்
     பாதியொர் மாதினொடும் பயிலும் பரமா பரமன்
     போதியலும் முடிமேற் புனலோடரவம் புனைந்த
     வேதியன் மாதிமையால் விரும்புமிடம் வெண்டுறையே.”
                                         (சம்பந்தர்)