பக்கம் எண் :

702 திருமுறைத்தலங்கள்


“கொட்டமே கமழும்” என்று தொடங்கும் பதிகம் பாடி மறுகரையை
அடைந்தார். இறைவன் காட்சிதர, தரிசித்து, ஆலயத்தை அடைந்து போற்றிப்
பதிகத்தை நிறைவு செய்து வழிபட்டார். இவ்வற்புதம் இன்னும் இத்தலத்தில்
‘ஓடத் திருவிழா’வாக ஐப்பசி அமாவாசைக்கு மறுநாள் சிறப்பாக
நடைபெறுகின்றது. இத்தலம் வில்வவனம் - கூவிளவனம் என்னும் சிறப்பினது.
(கூவிளம் - வில்வம்) கூவிளம்புதூர் - கொள்ளம்புதூர் ஆயிற்று. இதுதவிர,
பிரமவனம், பஞ்சாட்சரபுரம், காண்டீபவனம் என்னும் பெயர்களும்
இத்தலத்திற்கு உண்டு. அருச்சுனன் வழிபட்டதாகவும் வரலாறு தல
புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

     இறைவன் - வில்வாரண்யேஸ்வரர், வில்வவனநாதர்
     இறைவி - சௌந்தரநாயகி, அழகு நாச்சியார்
     தலமரம் - வில்வம்
     தீர்த்தம் - பிரமதீர்த்தம், அகத்திய தீர்த்தம், காண்டீப தீர்த்தம்
(அருச்சுன தீர்த்தம்), முள்ளியாறு எனப்படும் வெட்டாறு முதலியன.

     சம்பந்தர் பாடல் பெற்றது.

     விநாயகர், கங்கை, காவிரி, ஆதிசேடன், இடைக்காடர், வரகுண
பாண்டியன், கோச்செங்கட்சோழன், பிருகுமுனிவர், காசிபர், கண்வர்,
அகத்தியர், வசிட்டர், வாமதேவர் முதலியோர் வழிபட்ட தலம்.

     
“பொற்புறு கொள்ளம் பூதூர் எனவொரு புகழ்ப் பேர் கொண்ட
     விற்பொலி மதில்சூழ் வில்வ வனமது விண்ணோர் போற்றும்
     சிற்பரன் உகந்த காசி செறி அகத்திய காவேரி
     அற்புதமாகுங் கங்கை பலமும் அப்படியே யாமால்” (தலபுராணம்)


     சுவாமி விபுலானந்தர் அவர்கள் - யாழ்நூலின் ஆசிரியர் பலகாலம்
ஆராய்ந்து வெளியிட்ட யாழ்நூலை அரங்கேற்றிய இடம் இத்தலமேயாகும்
(1947-ல்). திருக்கோயில் கிழக்கு நோக்கிய சந்நிதி. நகரத்தார் திருப்பணி
பெற்றது. முகப்பு வாயிலின் மேற்புறத்தே ரிஷபாரூடர், விநாயகர்,
சுப்பிரமணியர் திருமேனிகள் வண்ணத்தில் சுதையில் அமைக்கப்பட்டுள்ளன.
துவார விநாயகர் இருபுறமும் உள்ளார். கோயிலின்முன் பிரம தீர்த்தம்
உள்ளது. உள்நுழைந்ததும் வலப்பால் நந்தவனத்தின் மத்தியில் மகாலட்சுமி
சந்நிதி உள்ளது. இரண்டாங் கோபுரம் ஐந்து நிலைகளையுடையது. வாயிலில்
இருபுறமும் பொய்யாத விநாயகர், தண்டபாணி சந்நிதிகள் தனித்தனிக்
கோயில்களாக உள்ளன. வெளிப்பிராகாரத்தில் சந்நிதிகள் எவையுமில்லை.