பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 703


     கோபுரத்துள் நுழைந்ததும் வலப்பக்க கற்தூணில் சம்பந்தர் ஓடம் ஏறிச்
செலுத்தும் சிற்பம் உள்ளதைக் கண்டு மகிழலாம். பிராகாரத்தில் வலம் வரும்
போது நால்வர், வலம்புரி விநாயகர், சோமாஸ்கந்தர், கஜமுத்தீசர்,
முல்லைவனநாதர், சாட்சிநாதர், பாதாளவரதர், மகாலிங்கர், விநாயகர்,
கங்கையம்மன், தட்சிணாமூர்த்தி, சரஸ்வதி, விசாலாட்சி, சோழமன்னன், அவன்
மனைவி ஆகிய சந்நிதிகள் உள்ளன. அடுத்தாற் போல ஆறுமுக சுவாமி,
மகாலட்சுமி, பைரவர், பள்ளியறை, நவக்கிரகங்கள், சனிபகவான், சூரியன்
சந்நிதிகள் உள்ளன.

     வலம் வந்து தரிசித்து, செப்புக் கவசமிட்ட கொடிமரத்தையும்,
கொடிமரத்து விநாயகரையும் வணங்கி, மண்டபத்தில் சென்றால் தெற்கு
நோக்கிய அம்பாள் சந்நிதி உள்ளது. சந்நிதிக்கு முன்னால் வெளியில்
மண்டபத்தின் மேற்புறத்தில் பன்னிரண்டு ராசிகளின் உருவங்கள் உரிய
கட்டட அமைப்பில் வடிக்கப்பட்டுள்ளது.

     அம்பாள் நின்ற திருக்கோலம். சந்நிதிகளின் எதிரில் உள்ள
தூண்களில் இத்திருக்கோயிலில் திருப்பணியைச் செய்வித்த நகரத்துச்
செட்டியார் உருவங்கள் உள்ளன. துவாரபாலகர்களையும் துவார
விநாயகரையும் முருகனையும் தரிசித்து மூலவர் மண்டபத்தை அடையலாம்.
வலப்பால் திருமுறைக்கோயில் - பக்கத்தில் நடராச சபை. இம் மண்டபத்தில்
விநாயகர், பிட்சாடனர், சந்திரசேகரர் முதலிய உற்சவத் திருமேனிகள்
பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

     நேரே மூலவர் தரிசனம், கோஷ்டமூர்த்தங்களாக நர்த்தன விநாயகர்,
தட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை உள்ளனர்.
சண்டேஸ்வரர் சந்நிதி உள்ளது. இத்திருக்கோயிலில் நாடொறும் ஆறுகால
பூஜைகள் முறையாக நடைபெறுகின்றன. நற்சாந்துப்பட்டி பெ.ராம. இராமன்
செட்டியார், பெ.ராம. லட்சுமணன் செட்டியார் குடும்பத்தினர்
இத்திருக்கோயிலின்பால் அளவிலாத பற்று கொண்டு இலட்சக் கணக்கில்
திருப்பணிகளைச் செய்வித்து - கோயில் முழுவதையும் கருங்கல்
திருப்பணியாக செய்வித்து 1.7.1979ல் மகாகும்பாபிஷேகத்தை மிகச்சிறப்பாகச்
செய்து முடித்துள்ளனர். இன்றும் இக்குடும்பத்தினர் இக்கோயிலைச்
செம்மையாகப் போற்றி வருவது நம்நெஞ்சுக்கு மகிழ்வூட்டும் அமுதச்
செய்தியாகும். மூன்றாம் இராசராசன், மூன்றாம் குலோத்துங்கசோழன்
காலத்திய கல்வெட்டுக்கள் இக்கோயிலுள் உள்ளன. கல்வெட்டுக் குறிப்பில்
சுவாமி ‘கொள்ளம்பூதூர் உடையார்’ என்றும், தேவி ‘அழகிய நாச்சியார்’