பக்கம் எண் :

706 திருமுறைத்தலங்கள்


     சோழநாட்டின் தலைநகராகத் திருவாரூர் விளங்கியபோது அதைச்
சார்ந்த கோட்டை இருந்தது என்றும், அக்கோட்டையின் அருகே எழுந்த
ஊர் ‘பேரெயிலூர்’ என்று பெயர் பெற்றதென்றும் அப்பெயரே மருவி
பேரையூர் என்றாயிற்று என்பது ஆய்வாளர் கருத்து. இவ்வூரில் தோன்றிய
பெண் புலவர் ஒருவர்- பேரெயில் முறுவலார் - பாடிய பாடல்கள்
குறுந்தொகையிலும், புறநானூற்றிலும் உள்ளன.

     இறைவன் - ஜகதீஸ்வரர்
     இறைவி - ஜகந்நாயகி
      தலமரம் - நாரத்தைமரம்
      தீர்த்தம் - அக்னி தீர்த்தம்

     அப்பர் பாடல் பெற்றது.

     சிறிய கிராமம். நகரத்தார் திருப்பணி பெற்ற கோயில். கிழக்கு நோக்கிய
மூன்று நிலை ராஜகோபுரம். பிராகாரத்தில் கற்பக விநாயகர், முருகன்,
மகாலட்சுமி, பைரவர், ஐயனார், சூரியசந்திரர் சந்நிதிகள் உள்ளன.
மண்டபத்தில் பஞ்சமூர்த்திகள், நடராசசபை உள்ளன. அம்பாள் சந்நிதி
தெற்கு நோக்கியுள்ளது. கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர்,
துர்க்கைத் திருமேனிகள் உள்ளன. திருப்பணிகள் நடைபெற வேண்டும்.

     
“மறையும் ஓதுவர் மான்மறிக் கையினர்
     கறைகொள் கண்டம் உடைய கபாலியர்
     துறையும் போகுவர் தூய வெண்ணீற்றினர்
     பிறையும் சூடுவர் பேரெயி லாளரே."           (அப்பர்)

                                  - வெள்ளிடைவான்
     வாம் பேரெயிற் சூழ்ந்த மாண்பாற் றிருநாம
     மாம் பேரெயில் ஒப்பிலாமணியே          (அருட்பா)


அஞ்சல் முகவரி:-

     அ/மி. ஜகதீஸ்வரர் திருக்கோயில்
     ஓகைப்பேரையூர் (வங்காரப்பேரையூர்)
     வடபாதிமங்கலம் அஞ்சல் - 610 206
     திருவாரூர் வட்டம் - திருவாரூர் மாவட்டம்.