பக்கம் எண் :

716 திருமுறைத்தலங்கள்


236/119. திருக்காறாயில்

திருக்காறைவாசல், காரவாசல்

     சோழநாட்டு (தென்கரை)த் தலம்.

     திருவாரூர் - திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலையில் உள்ள ஊர்.
திருவாரூர் - திருநெல்லிக்கா, நகரப்பேருந்து இவ்வூர் வழியாகச் செல்கிறது.
திருவாரூர், திருத்துறைப்பூண்டியிலிருந்து அடிக்கடி பேருந்துகள் உள்ளன.
இவ்வூர் நெடுஞ்சாலையிலேயே உள்ளது. ‘கார் அகில்’ மரக்காடாக இருந்த
இடமாதலின் ‘காரகில்வனம்’ என்பதே காரகில்- காறாயில் என்றாயிருக்க
வேண்டும். சம்ஸ்கிருதத்தில் ‘பனசாரண்யம்’, ‘காளாகருவனம்’ எனப்படுகிறது.
தேவதாரு வனம், கபாலபுரம், பிரமபுரம், கபித்தவனபுரம் (கபித்தவன்
என்பவன் தொண்டு செய்து வாழ்ந்த தலம்) எனவும் பெயர்களுண்டு. கபால
முனிவர்க்கு இறைவன் காட்சி கொடுத்த இடம். சப்த விடங்கத் தலங்களுள்
இது ஆதிவிடங்கத் தலமாகும். தியாகராஜா எழுந்தருளியுள்ள பெரும் பதி.
இங்குத்தான் இறைவன், பதஞ்சலிக்கு எழுவகைத் தாண்டவங்களையும் காட்டி
யளிருளியதாக வரலாறு.

     இறைவன் - கண்ணாயிரநாதர், கண்ணாயிரமுடையார்.
     இறைவி - கைலாசநாயகி.
     தலமரம் - ‘பலா’ எனப்படுகிறது. (‘அகில்’தான் இருக்க வேண்டும்)

     தீர்த்தம் - பிரமதீர்த்தம் (கோயிலுள் வடபால் உள்ளது) வடக்குப்
பிராகாரத்தில் உள்ள ‘சேஷதீர்த்தமும்’ சிறப்புடையது. பௌர்ணமிதோறும்
இக்கிணற்றுத் தீர்த்தத்தைத் தொடர்ந்து பருகிவரின் பிணிதீரும் என்பது
நம்பிக்கை.

     சம்பந்தர் பாடியது.

     கிழக்கு நோக்கிய கோயில். வலப்பால் கோயில் அலுவலகமுள்ளது.
ராஜகோபுரமில்லை. கவசமிட்ட கொடிமரம், பலிபீடம், சற்று உயரத்தில் நந்தி
உள்ளது. உள்கோபுரம் மூன்று நிலைகளையுடையது. வாயிலைத் தாண்டி
உட்சென்று வலமாக வரும்போது, தலப்பதிகக் கல்வெட்டு, சுந்தரர் (உற்சவர்)
சந்நிதி, தியாகராஜசபை, விநாயகர், பல சிவலிங்கத் திருமேனிகள், மகாவிஷ்ணு,
ஆறுமுகசுவாமி, சரஸ்வதி, கஜலட்சுமி, பைரவர் முதலான சந்நிதிகள் உள்ளன.