தியாகராஜசபை தரிசிக்கத்தக்கது. பெருமான் ஆதிவிடங்கர். சபை உயரத்தில் அழகான பிரபையுடன் காட்சிதருகிறது. ஆதிவிடங்கன் ஆசனம் - வீரசிங்காசனம்; நடனம் - குக்குட நடனம். தியாகராஜா சந்நிதியில் வெள்ளிப்பேழையில் மரகதலிங்கம் உள்ளது. தியாகேசருக்கு நேர் எதிரில் சுந்தரர் சந்நிதி அமைந்துள்ளது கவனிக்கத்தக்கது. நாடொறும் காலையில் இச்சந்நிதியில் அபிஷேகம் மரகதலிங்கத்திற்கு வழிபாடு நடைபெறும்போது மக்கள் பலரும் வந்து வழிபடுகிறார்கள். வலம்முடித்துப் படிகளேறி முன்மண்டபத்தில் சென்றால் நேரே மூலவர் தரிசனம் - சிவலிங்கத் திருமேனி சுயம்பு. வலப்பால் அம்பாள் சந்நிதி. நின்ற திருக்கோலம் - எடுப்பான தோற்றம் - தெற்கு நோக்கியது. ஓரிடத்தில் நின்று நேரே பெருமானையும் வலப்பால் அம்பாளையும் தரிசித்து மகிழத்தக்க அமைப்புடைய சந்நிதிகள். மூலவருக்கு முன்னால் பக்கத்தில் நடராசசபை உள்ளது. உற்சவத் திருமேனிகளுள் ‘காட்சி தந்த நாயனார்’ - பின்னால் நந்தியும், பக்கத்தில் உமையும் கூடிய - திருமேனி தரிசிக்கத்தக்கது. நகரத்தார் திருப்பணி பெற்றுள்ள இக்கோயில் நன்கு உள்ளது. கோஷ்டமூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கைச் சந்நிதிகள் உள்ளன. நாடொறும் ஆறுகால வழிபாடுகள் நடைபெறுகின்றன. வைகாசியில் பெருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. நடராசர், தியாகராசர் அபிஷேகங்கள் முறையாக நடைபெறுகின்றன. இத்தலத்தில் சொல்லப்படும் செவிவழிச் செய்திகளாவன:- 1) பிரமதீர்த்தக் கரையில் உள்ள விநாயகருக்குக் ‘கடுக்காய் விநாயகர்’ என்று பெயர். ஒருசமயம் வணிகன் ஒருவன் சாதிக்காய் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வந்தவன் சற்று இளைப்பாற இத்தீர்த்தக் கரையில் அமர்ந்தான். அப்போது விநாயகர், ஒரு சிறுவனைப் போல வந்து, என்ன மூட்டைகள் என்று கேட்க, வணிகன் உண்மையை சொல்லாமல் ‘கடுக்காய் மூட்டைகள்’ என்று சொல்ல, சிறுவனும் மறைந்தான். மூட்டைகள் அத்தனையும் கடுக்காய் மூட்டைகளாக மாறியிருப்பது கண்ட, வணிகன் மனம் நொந்து, தன் பிழை பொறுக்குமாறு உள்ளம் உருகி வேண்ட, விநாயகரும் அவனை மன்னித்து, அம்மூட்டைகளைப் பழையபடி சாதிக்காய்களாக மாற்றித் தந்தாராம். இதனால் இக்குளக்கரை விநாயகருக்குக் ‘கடுக்காய் விநாயகர்’ என்று பெயர் வந்தது. 2) தாசி ஒருத்திக்கு இறைவன் இத்தலத்தில் காட்சி தந்தார். ஆதலின் இங்குப் பெருமானுக்கு ‘காட்சி தந்த நாயனார்’ என்றும் பெயராம். |