3) ஒருசமயம் இத்தலத்தில் கும்பாபிஷேகம் நடந்தபோது குருட்டுப் பெண்ணொருத்தி, பக்கத்தில் உள்ள ‘வெள்ளையாறு’ என்னுமிடத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள். கும்பாபிஷேகத்தின்போது கூட்டத்தினர் எழுப்பிய குரலொலி கேட்டுத் தன்னால் பார்க்க முடியவில்லையே என்று உருக்கமுடன் பிரார்த்திக்க, இறைவன் அப்பெண்ணுக்குக் கண்பார்வை தந்து, அப்பார்வையும் நம் பார்வையைப் போல் சாதாரணமாக இல்லாமல் ஒன்றுக்கு ஆயிரமாகப் பெருகுமாறு ஒளிதந்து அருளும் புரிந்து, அவளும் பார்த்து மகிழுமாறு செய்தாராம். இதனால் இறைவனுக்குக் ‘கண்ணாயிரநாதர்’ என்று பெயர் வந்தது. கல்வெட்டில் இப்பெருமானின் பெயர் ‘காறாயில் மகாதேவர்’ என்று குறிக்கப்பெற்றுள்ளது. “தாயானே தந்தையுமாகிய தன்மைகள் ஆயானே ஆய நல்லன்பர்க் கணியானே சேயானே சீர் திகழுந் திருக் காறாயில் மேயானே என்பவர்மேல் வினை மேவாவே.” (சம்பந்தர்) “செங்கமலை வாணியுறை காறாயில் ஆயிரங்கண் சிவன் செம்பாதி அங்கமதில் தங்கிஉயிர் அத்தனையும் சுகானு பவமாரச் சந்தி கங்குல் பகல் எனும் மூன்று காலத்தும் பொதுச் சிறப்பிற் கடைக் கணித்து மங்களத்தைச் செய்தருளும் கைலாச நாயகியை வாழ்த்தி வாழ்வாம்.” (தலபுராணம்) “ஏறேய வாழ்முதலே ஏகம்பா எம்பெருமான் ஏறேறி யூரும் எரியாடீ - ஏறேய ஆதி விடங்கா காறை அண்டத்தாய் எம்மானே ஆதி விடங்கா வுமை நன்மாட்டு.” (11ஆம் திருமுறை பரணதேவ நாயனார்) - நாட்டுமொரு “நூறாயிலென்பர் தமை நோக்கியருள் செய் திருக் காறாயில் மேலோர் கடைப்பிடியே.” (அருட்பா) அஞ்சல் முகவரி:- அ/மி. கண்ணாயிரமுடையார் திருக்கோயில் காறைவாசல் & அஞ்சல் - 610 202 திருவாரூர் வட்டம் - மாவட்டம். |