பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 719


237/120. கன்றாப்பூர்

கோயில் கண்ணாப்பூர்

     சோழநாட்டு (தென்கரை)த் தலம்.

     (1) நாகப்பட்டினம் - திருத்துறைப்பூண்டி சாலையில் வருவோர்
சாட்டியக்குடி வந்து, அக்கூட்டுரோடில் பிரியும் சாலையில் 2 கி.மீ. சென்று,
ஆதமங்கலம் தாண்டி, கோயில் கண்ணாப்பூர் கூட்டுரோடு என்று கேட்டு
அவ்விடத்தில் வலப்புறமாகப் பிரியும் உள்சாலையில் 1 கி.மீ. சென்றால்
தலத்தையடையலாம். (சாலை பிரியும் இடத்தில் சிறிய ஊர்ப்பலகையுள்ளது.
இது மழைக்காலத்தில் விழுந்து விடலாம். எனவே வழிகேட்டுச் சென்று
திரும்புதலே சிறந்தது.)

     (2) திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் வருவோர் மாவூர்
கூட்டுரோடு வந்து அங்குப் பிரியும் சாலையில் மருதூர் வந்து, அதற்கு
அடுத்துள்ள கோயில் கண்ணாப்பூர் கூட்டுரோடு என்று கேட்டு
அவ்விடத்தையடைந்து அங்கு (இடப்புறமாகப்) பிரியும் உள்சாலையில் 1 கி.மீ.
சென்றால் தலத்தையடையலாம்.

     கோயில் வரை வாகனங்கள் செல்லும். (கீழ கண்ணாப்பூர் என்ற ஊர்
ஒன்றுள்ளது. தலம் அதுவன்று. எனவே கோயில் கண்ணாப்பூர் என்று
கேட்க வேண்டும்.)

     சைவப் பெண் ஒருத்தி வைணவன் ஒருவனுக்கு மனைவியாகி, மாமியார்
வீட்டார் காணாதவாறு சிவலிங்க வழிபாடு செய்ய, கணவன் அதுகண்டு அவ்
இலிங்கத்தைக் கிணற்றில் எறிந்துவிட, அப்பெண் வேறுவழியின்றி கன்று
கட்டியிருந்த முளை (ஆப்பு)யையே சிவபெருமானாகப் பாவித்து வழிபட, ஒரு
நாள் கணவன் அதையும் கண்டு, கோபித்து அம்முளையைக் கோடரியால்
வெட்ட இறைவன் வெளிப்பட்டு அருள்புரிந்த தலம். (கன்று - ஆப்பு - ஊர்)
சுவாமி மீது வெட்டிய தழும்பு உள்ளதைக் காணலாம். இடும்பன் வழிபட்ட
தலம்.

     இறைவன் - வஸ்ததம்பபுரீஸ்வரர், நடுதறியப்பர், நடுதறிநாதர்
     இறைவி - ஸ்ரீ வல்லிநாயகி, மாதுமையம்மை
     தலமரம் - கல்பனை (பனைமரத்தில் ஒருவகை) தற்போதில்லை.
     தீர்த்தம் - சிவகங்கை (எதிரில் உள்ளது.)

     அப்பர் பாடல் பெற்றது.