கிழக்கு நோக்கிய கோயில் - மூன்று நிலைகளையுடைய இராஜகோபுரம். எதிரில் வெளியில் அலுவலகமுள்ளது. கொடிமரமில்லை. பலிபீடம் நந்தி உயரமான பீடத்தில் உள்ளன. உள்வலத்தில் தீர்த்த கிணறு, விநாயகர், அடுத்துள்ள மண்டபத்தில் வரிசையாக சிவலிங்கம், விநாயக மூர்த்தங்கள் நான்கு, பிடாரியம்மன், சுப்பிரமணியர், சந்திரன், சூரியன், நவக்கிரகம், சனீஸ்வரன் சந்நிதிகள் உள்ளன. சனிபகவானை அடுத்துள்ள நால்வர்களுள் இருவர் சம்பந்தராகவும் இருவர் அப்பராகவும் காட்சி தருகின்றனர் - மாற்றிருவர் இல்லை. வலமுடித்து முன் மண்டபமடைந்தால் வலப்பால் அம்பாள் சந்நிதி - நின்ற திருமேனி. நேரே மூலவர் தரிசனம். வாயிலைக் கடந்தால் வலப்பால் நடராசசபை, இடப்பால் உற்சவ மூர்த்தங்கள், மூலவர் - சதுரபீடம், பாணத்தில் (தலவரலாற்றுக் கேற்ப) வெட்டிய தழும்புள்ளது. பிரபையுடன் தரிசிக்கும் போது மனநிறைவாக இருக்கிறது. கோயிலின் பார்வையில் பசு மடம் ஒன்றுள்ளது. தேவகோட்டை திரு. முத்து. க. அ.ராம. அண்ணாமலைச் செட்டியார் அவர்களின் நிவேதனக் கட்டளையிலிருந்து, ஆலயத்திற்குத் தரிசனம் செய்யவரும் வெளியூர் அன்பர்கள் - தக்கவர்களுக்கு உணவு அளிக்கப்படு கின்றது. நாடொறும் ஐந்துகால பூஜைகள். கோயில் நன்கு பராமரிக்கப் பட்டுப் பொலிவுடன் தோற்றமளிக்கிறது. வைகாசி விசாகத்தில் உற்சவம். சித்திரையில் மாரியம்மனுக்கு பத்து நாள்கள் சிறப்பாக விழா நடைபெறுகிறது. இவ்வூரில் உள்ள எல்லா நிலங்களும் அ/மி. நடுதறிநாதர் பெயரிலேயே பட்டாவாக உள்ளன. தனிப்பட்ட எவருக்கும் சொந்தமாக வேறு பட்டா நிலங்கள் இல்லையாம். அக்காலத்து ஆலயத்தின் பால் சமுதாயத்திற்கிருந்த ஆர்வம்தான் என்னே! விடிவதுமே வெண்ணீற்றை மெய்யிற் பூசி வெளுத்தமைந்த கீளொடுகோ வணமுந் தற்றுச் செடியுடைய வல்வினைநோய் தீர்ப்பா யென்றும் செல்கதிக்கு வழிகாட்டுஞ் சிவனே என்றும் துடியனைய இடைமடவாள் பங்கா என்றும் கடலைதனில் நடமாடும் சோதீ யென்றும் கடிமலர்தூய்த் தொழும் அடியார் நெஞ்சின் உள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே. (அப்பர்) |