239 / 122. கைச்சினம் கச்சனம் | சோழநாட்டு (தென்கரை)த் தலம். திருவாரூர் - திருத்துறைப்பூண்டி பேருந்து மார்க்கத்தில் உள்ள தலம். பேருந்து வசதி உள்ளது. திருக்கைச்சின்னம் என்னும் இத்தலத்தின் பெயர் மக்கள் வழக்கில் தற்போது ‘கச்சனம்’ என்று வழங்கப்படுகிறது. இறைவன் - கைச்சினேஸ்வரர், கரச்சினேஸ்வரர். இறைவி - சுவேதவளை நாயகி, வெள்வளைநாயகி தலமரம் - கோங்கு இலவு (இதன் அடியில் உள்ள லிங்கம் கோங்கிலவு வனநாதேஸ்வரர்) தீர்த்தம் - வச்சிர தீர்த்தம், இந்திர தீர்த்தம், அகத்திய தீர்த்தம். சம்பந்தர் பாடல் பெற்றது. திருணபிந்து முனிவர் வழிபட்ட தலம். இந்திரன், அகத்தியர் முதலியோரும் வழிபட்டுப் பேறு பெற்றுள்ளனர். இந்திரன் மணலால் இலிங்கம் அமைத்து வழிபட்டு, அதை எடுத்து வைக்கும்போது அவன் கை அடையாளம் சுவாமிமீது படிந்தது. எனவே கைச்சின்னம் என்ற பெயர் பெற்றது. இது தற்போது வழக்கில் கச்சனம் என்றாயிற்று. சுவாமி மீது விரல்கள் பட்ட அடையாளம் உள்ளது. முற்காலத்தில் இப்பகுதியில் கோங்கு மரங்கள் அடர்ந்திருந்தமையால் கோங்குவனம், கர்ணிகாரவனமென்றும் பெயர்கள் உண்டு. இத்தலத்திற்குக் கிழக்கில் ‘கோளிலி’யும், தெற்கில் ‘திருத்துறைப் பூண்டியும், மேற்கில் ‘நெல்லிக்காவும்’, வடக்கில் ‘திருக்காறாயிலும்’ உள்ளன. மதுரை திருஞான சம்பந்தர் ஆதீனத்திற்குச் சொந்தமான கோயில். முகப்பில் மூன்று நிலைகளையுடைய இராஜகோபுரம் காட்சி தருகிறது. இக்கோயில் மாடக்கோயில் என்னும் அமைப்பைச் சார்ந்தது. கோயிலுக்குள் ஒரு பிராகாரமும் மதிலை அடுத்து ஒரு பிராகாரமும், வெளிவீதியில் உள்ளன. உள் பிராகாரத்தில் மேற்கில் விநாயகர் அஷ்டவசுக்களில் ஒருவனான விதூமன் வழிபட்ட விதூமலிங்கம், |