சுப்பிரமணியர், அம்பாள் சந்நிதிகளும் உள்ளன. கிழக்கில் நடராஜ மண்டபம் உள்ளது. மதிலுக்கு வடப்புறம் இந்திரதீர்த்தமும் தென்புறம் வச்சிரத் தீர்த்தமும் உள்ளது. இத்திருக்கோயிலுக்குச் சொந்தமான நஞ்சையில் வெட்டும் பொழுது கிடைத்த சங்கு சக்கரபாணியாகத் திகழும் பெருமாள்சிலை, உள்பிராகாரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்திரன் சாபம் விலகியதும் தியாகராஜர் காட்சி தந்ததும், அகத்தியரின் பிரமகத்தி விலகியதுமாகிய சிறப்புடைய தலம். யானை ஏறாதபடி கட்டப்பட்ட மாடக் கோயிலாகத் திகழும் இக்கோயில் மிகவும் பழமையானது. திருநாவுக்கரசர் தாம் பாடிய க்ஷேத்திரக் கோவையில் இடம் பெற்றுள்ள இக்கோயில் மாடக் கோயிலாதலின் உயர்ந்த மேடையுடன் அமைந்துள்ளது. இக்கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தி - ரிஷபாரூட தட்சிணா மூர்த்தியாகக் காட்சி தருவது சிறப்பாக உள்ளது. (பின்புறத்தில் நந்தி உள்ளது தெரிகிறது) நடனச் சிற்பங்களும், அர்த்தநாரீஸ்வர வடிவமும் அழகாக உள்ளன. இத்திருக்கோயிலில் பதினொரு கல்வெட்டுகள் காணப்பெற்றுள்ளன. அவைகளில் இக்கோயிலுக்கும் பிறவுக்கும் அளிக்கப்பட்ட நிபந்தங்கள் - நிலபுலன்கள் குறிக்கப்பட்டுள்ளன. கல்வெட்டுக்களில் இறைவனுக்கு, ‘கோங்கு இலவுவனேஸ்வரசுவாமி, திருக்கைச்சின்னம் உடைய நாயனார், கரச்சின்னேஸ்வரர்’ முதலிய பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. பூஜைகள், வழிபாடுகள் முதலியவை செம்மையாக நடைபெறுகின்றன. விசேஷ நாள்களில் சுவாமிக்கு வெள்ளி நாகாபரணமும், அம்பாளுக்கு வெள்ளி அங்கியும் சார்த்தப் பெறுகின்றன. வைகாசி விசாகத்தில் கோயிற் பெருவிழா பத்துநாள்களுக்கு நடைபெறுகிறது. ஆனித் திருமஞ்சனம், கார்த்திகை ஞாயிறு நாள்கள், மார்கழித் திருவாதிரை, மாசிமகம், பங்குனி உத்திரம் முதலிய விசேஷ காலங்களிலும், பிரதோஷ காலங்களிலும் சுவாமி புறப்பாடு நடைபெறுகின்றது. கந்தசஷ்டிவிழா சிறப்பாக நடத்தப்பெறுகிறது. பேய் பிடித்தல் போன்ற தோஷங்கள் இத்தலத்தில் நீங்குவதாக வரலாறு சொல்லப்படுகிறது. “தையலோர் கூறுடையான் தண்மதிசேர் செஞ்சடையான் மையலாமணி மிடற்றான் மறைவிளங்கு பாடலான் நெய்யுலா மூவிலைவேல் ஏந்தி நிவந்தொளிசேர் கையுடையான் மேவியுறை கோயில் கைச்சினமே.” (சம்பந்தர்) |