- நையுமன மைச் சினத்தை விட்டோர் மனத்தில் சுவை கொடுத்துக் கச்சினத்தினுட் கரையாக் கற்கண்டே.” (அருட்பா) அஞ்சல் முகவரி:- அ/மி. கைச்சின்னேஸ்வரர் திருக்கோயில் கச்சனம் & அஞ்சல் 610 201 திருவாரூர் வட்டம் - மாவட்டம். 240 / 123. திருக்கோளிலி திருக்குவளை | சோழநாட்டு (தென்கரை)த் தலம். இது மக்கள் வழக்கில் திருக்குவளை என்று வழங்கப்படுகிறது. சுந்தரமூர்த்தி சுவாமிகள் நெல்மலையை எடுத்துச் செல்ல ஆள்வேண்டிப் பாடிய சிறப்புக்கு உரியதாய் விளங்குவது இத்தலம். திருவாரூர் எட்டிக்குடி சாலையில் எட்டிக்குடிக்கு முன்னால் உள்ள தலம். திருவாரூரிலிருந்து 19 கி.மீ. தொலைவில் உள்ளது. திருவாரூரில் இருந்து அடிக்கடி பேருந்து உள்ளது. நேரே செல்லலாம். திருவாரூருக்கு அடுத்தபடியாக தியாகேசப் பெருமான் இத் தலத்தில் சிறந்து விளங்குகிறார். இந்தத் தேவஸ்தானம் ஸ்ரீ தியாகராஜ சுவாமி தேவஸ்தானம் என்று வழங்குகிறது. சப்த விடங்கத் தலங்களுள் ஒன்று. (அவனி விடங்கத்தலம், பிருங்கநடனம்) பிரமன் வழிபட்ட தலம். அகத்தியர் வழிபட்ட சிவலிங்கம் உள்ளது. பகாசூரனைக் கொன்றதனால் உண்டான பாவத்தை (பிரமகத்தித்தோஷம்) வீமன் இங்குப் போக்கிக் கொண்டான் என்பது வரலாறு. முன்கோபுரத்தில் பகாசூரன் உருவமும் பிரமகத்தி உருவமும் உள்ளது. இறைவன் - பிரமபுரீசுவரர், கோளிலி நாதர், கோளிலி நாதேஸ்வரர், (திருவாரூரில் பெருமான் புற்றிடங் கொண்டவராக விளங்குதல் போல இங்கு இறைவன்) வெண்மணலால் ஆன சிவமூர்த்தமாக காட்சி தருகிறார். |