இறைவி - வண்டமர் பூங்குழலி. தீர்த்தம் - பிரமதீர்த்தம். கோயிலுக்கு எதிரில் உள்ளது. தலமரம் - ‘தேற்றாமரம்’. மூவர் பாடல் பெற்ற தலம். இத்தலத்திற்குப் பிரமதபோவனம், கதகாரண்யம் (தேற்றாமரவனம்), புஷ்பவனம், தென்கயிலை எனப்பல பெயர்களுண்டு. நவக்கிரகங்கள் முதலியோர்க்கு உண்டாய குற்றங்களை நீக்கி அருள் புரிந்தமையால் கோளிலி என்று பெயர் பெற்றது. “கோளாய நீக்குமவன் கோளிலி எம்பெருமான்” - ஞானசம்பந்தர் வாக்கு. இங்குள்ள தியாகராஜப் பெருமானின் பெயர் - ஊழிப்பரன், அவனிவிடங்கத் தியாகர், அம்பிகை - நீலோற்பலாம்பாள். விநாயகர் - தியாகவிநாயகர், முருகன்- சுந்தரவடிவேலர். இத்திருக்கோயில் ஊரின் மத்தியில் அமைந்துள்ளது. கிழக்கு நோக்கிய சந்நிதி. அழகான ராஜகோபுரம். உள்ளே நுழைந்தால் வடபுறம் வசந்த மண்டபம். துவஜஸ்தம்பம் தாண்டி இரண்டாம் கோபுரத் திருவாயில். உள்பிராகாரத்திற்கு எதிரே சுவாமி சந்நிதி, தென்பால் தியாகேசர். எதிரே சுந்தரர் உற்சவமூர்த்தியாகப் பரவையாருடன் காட்சி தருகின்றார். பிராகாரவலம் வரும் போது தென் மேற்கில் தியாகவிநாயகரும், அடுத்து விசுவநாதர் இலிங்கமூர்த்தமும், வாகன மண்டபமும், விசாலாட்சி, இந்திரபுரீசர் முதலிய சந்நிதிகளும் உள. முருகப்பெருமானுக்கு அழகான சந்நிதி வடபால் சொக்கலிங்கம், அண்ணாமலையார், இலிங்க வடிவங்கள், தொடர்ந்து நால்வர், மகாலட்சுமி மூர்த்திகள் உள. அம்பாள் சந்நிதி கிழக்கு நோக்கியது, தனிக்கோவிலாகவுள்ளது. சபாநாதர் தரிசனம் அழகானது. நவக்கிரகங்கள் ஒருமுகமாகத் தென்திசையை நோக்கி விளங்குகின்றன. சுவாமி கர்ப்பக்கிருஹத்தில் வடபுறம் அர்த்தநாரீசுவரர், பிரம்மா, துர்க்கை, உமாமகேசுவரர், தென்புறம் தேவகோஷ்டங்களில் முறையே நடராஜர், நர்த்தனகணபதி, பிட்சாடனர், தட்சிணாமூர்த்தி மூர்த்தங்களும் உள்ளன. மேற்பால் சங்குசக்கரத்துடன் திருமால் உருவமுள்ளது. பிராகாரத்தில் கீழ்ப்புறம் சந்திர சூரியர் உருவங்களும், இரண்டாம் கோபுர தென்மதிலில் பஞ்சபாண்டவர் பூசித்து வழிபடும் கோலமும், பிரமன் வழிபடுவதும் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளன. சுவாமி, அம்பாள் கோயில்களுக்கு நடுவில் அகத்தியர் பூசித்த இலிங்கமுள்ளது. அது தனி கர்ப்பக்கிருக, அர்த்தமண்டபத்துடன் உள்ளது. |