சண்டீசர் சந்நிதியும் உளது. ஆலயத்திருப்பதிகங்கள் பொறிக்கப்பட்ட சலவைக்கற்கள் சுவாமி சந்நிதியில் பதிக்கப் பெற்றுள்ளன. ஆலயத்திற்கு அண்மையில் சந்திரநதி கிழக்கு நோக்கி ஓடுகிறது. கோயிலுக்கு எதிரில் பிரமதீர்த்தமும், தென்புறம் இந்திரதீர்த்தமும், மேற்புறம் அகத்தியர் தீர்த்தமும், சிவலோக விநாயகர் கோயிலருகில் விநாயக தீர்த்தமும் உள்ளன. அம்பாள் சந்நிதியில் கிணறு வடிவில் சத்திதீர்த்தம் உள்ளது. புனிதமான இந்நீரே அபிஷேகத்திற்குப் பயன்படுகிறது. ஆலயத்திற்குத் தென்மேற்கு மூலையில் சிவலோக விநாயகர் (ஹேமகாந்த மன்னனுக்குச் சிவலோகம் காட்டியவர்) சந்நிதி உளது. இத்தலத்தில் பிரமன், திருமால், இந்திரன், அகத்தியர், முசுகுந்தன், பஞ்சபாண்டவர்கள், நவக்கிரகங்கள், ஹேமகாந்த மன்னன் முதலிய பலர் வழிபட்டுப் பேறடைந்துள்ளனர். இத்தலத்தின் வடபால் அருகில் குண்டையூரும் வலிவலமும், தென்பால் முருகன் தலமான எட்டுக்குடியும், மேற்கில் கச்சனமும், கிழக்கில் சந்திர தீர்த்தம் கடலொடு சங்கமமாகுமிடமான காமேசுரமும் உள்ளன. இது நீராடும் துறையாக விளங்குகிறது. தை, ஆடி மஹாளயபக்ஷ அமாவாசைகளில் மக்கள் இத்துறையில் நீராடுகின்றனர். இங்கு நடைபெறும் முக்கிய விழாக்கள் :- மாசிமகத்தில் ‘நெல்அட்டிச் செல்லும் விழா, கார்த்திகை ஞாயிறு நாள்கள், முசுகுந்த அர்ச்சனை, வசந்த உற்சவம், தைப்பூசம் முதலியன. உற்சவ காலங்களில் - தியாகராஜத் தலங்களில் சந்திரசேகரர் உற்சவமூர்த்தியாகப் புறப்பாடாவது அறியத்தக்கது. ஞானசம்பந்தர், தம் திருப்பதிகத்தில் கோள்களின் தீமையகலும் குறிப்பினையும், மார்க்கண்டேயன், சண்டீசர்க்கு அருள் செய்தது. பாண்டவர்கள் வழிபட்டது, பாணபத்திரர்க்கு, அர்ச்சுனனுக்கு, நமிநந்தியடி களுக்கு, இராவணனுக்கு அருள் புரிந்தது போன்ற குறிப்புக்கள் உள்ளன. நாவுக்கரசரின் திருப்பதிகத்தில் (திருக்குறுந்தொகை) உபமன்யு முனிவர்க்கும் பாற்கடலீந்த வரலாறு சொல்லப்படுகிறது. சுந்தரருக்கு நெல் அனுப்ப இயலாது வருந்திய குண்டையூர்க் கிழார்க்கு இறைவனருளால் நெல்மலை கிடைத்தது. அதை ‘சுந்தரர் கோளிலியப்பரை வேண்டி ஆள்பெற்றுத் திருவாரூருக்குக் கொணர்வித்தார் என்ற செய்திக் குறிப்புடையது, நீள நினைந்தடியேன் எனும் சுந்தரர் பதிகம். தியாகராஜர் உலா உள்ளது. இயற்றியவர் பெயர் தெரியவில்லை. இக்கோயிலில் 19 கல்வெட்டுகள் - சோழர், பாண்டியர் காலத்தியவை, கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் ‘திருக்கோளிலி |