உலா வருகின்றார். நடராசப் பெருமானை வணங்கி உள் நுழைந்தால் நேரே மூலவர் காட்சி தருகின்றார். பக்கத்தில் உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. சோமாஸ்கந்தர், ஆறுமுகர், சந்திரசேகர், விநாயகர், பள்ளியறை மூர்த்தி, சுக்கிரவார அம்பாள், பிரதோஷ நாயகர், பிட்சாடனர், பூதகணம், மான், துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி, நால்வர் முதலிய திருமேனிகள் தொழத் தக்க அரிய அழகுடையவை. பக்கத்தில் நால்வர், பிரதிஷ்டை உள்ளது. சூரியன் திருவுருவம் உள்ளது. மூலவர் அற்புதமான மூர்த்தி, சுயம்பு - தீண்டாத் திருமேனி. மேலே செப்பு மண்டபம் - மத்தியில் உருத்திராக்க விமானம். சுற்றிலும் உள்ள பத்து ஊர்களுக்கு இம்மூர்த்தியே குல தெய்வம். வாயிலில் இரு துவாரபாலகர்கள், திரிபுராதிகள் மூவருள் இருவர் இவர்கள் என்று சொல்லப்படுகிறது. மணல் இலிங்கம், இங்கு மூர்த்தியைப் பாலாலயம் செய்யும் வழக்கமில்லையாம். பதினாறு முழ வேஷ்டிதான் சுவாமிக்குச் சார்த்தப் படுகின்றது. அதிக மழை, வெள்ளம் வரும் அறிகுறி இருந்தால் சுவாமி மீது வெண்மை படரும் என்றும், போர் நிகழ்வதாயின் செம்மை படரும் என்றும் சொல்லப்படுகின்றது. இதுபற்றியே ஞானசம்பந்தர் தம் பாடலில் ‘ஐயன்நல் அதிசயன்’ என்று குறிப்பிடுகின்றார். இவ்வண்ண மாற்றம் தற்போது காணப்படவில்லையாம். மூலவர் - திரிபுரம் எரித்த மூர்த்தி. அபிஷேகங்கள் செய்வதால் உண்டாகும் மேற்புறப் படிவுகள் தானாகவே பெயர்ந்து விழுந்து திருமேனி சுத்தமாகி விடுமாம். சுவாமி கிழக்கு நோக்கிய சந்நிதி. கஜப்பிரஷ்ட விமான அமைப்பு. கோயிலிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள ‘திருமஞ்சனமேடை’ என்று சொல்லப்படும் (கூவம் ஆற்றின் கரையில் உள்ள) இடத்திலிருந்துதான் தீர்த்தம் கொண்டு வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இதற்கென ஒருவர் நியமிக்கப்பட்டு இவ்வாறு தினந்தோறும் நான்கு காலங்களுக்கும் அவ்வப்போது கொண்டு வரப்பட்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. இவ்வாறு கொண்டு வருவதில் தவறு நிகழ்ந்து - அதாவது கொண்டு வருபவர் அத்தீர்த்தத்திற்குப் பதில் - செல்ல வேண்டிய தொலைவுக்குப் பதிலாக வேறு தீர்த்தத்தைக் கொண்டு வந்துவிட்டால், அதை அபிஷேகம் செய்துவிட்டால் சுவாமி மீது சிற்றெறும்புகள் படரும் என்றும் அதைக் கொண்டு அத்தவற்றைக் |