பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 731


241 / 124. திருவாய்மூர்

     சோழநாட்டு (தென்கரை)த் தலம்.

     (1) நாகப்பட்டினம் - திருத்துறைப்பூண்டி பேருந்துச் சாலையில் சென்று,
எட்டிக்குடிக்குப் பிரியும் சாலையில் திரும்பிச் சென்றால் தலத்தை
யடையலாம். லீலாஹாஸ்யபுரம் என்னும் பெயருடையது. சப்தவிடங்கத்
தலங்களுள் ஒன்று. விடங்கர் - நீலவிடங்கர். நடனம் - கமலநடனம்.
இருக்கை - இரத்தின சிம்மாசனம். சூரியன் வழிபட்ட தலம். “வாய்மூரில்
இருப்போம் தொடர்ந்து வா” என்று அப்பர் பெருமானை இறைவன்
உணர்த்தி அழைத்துச் சென்றது அரிய செய்தி.

     இறைவன் - வாய்மூர்நாதர்.
     இறைவி - க்ஷீரோப வசனி, பாலின் நன்மொழியாள்
     தலமரம் - பலா.
     தீர்த்தம் - சூரியதீர்த்தம்.

     சம்பந்தர், அப்பர் பாடல் பெற்றது.

     கோயிலுக்கெதிரில் குளம் உள்ளது. கரையில் விநாயகர் உள்ளார்.
மூன்று நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் கிழக்கு நோக்கிக் காட்சி
யளிக்கின்றது. வெளிச்சுவற்றில் நால்வர், பைரவர் சந்நிதிகளும் உள்சுற்றில்
விநாயகரும், வள்ளி தெய்வயானை சமேத சுப்பிரமணியரும், மகாலட்சுமியும்
உள்ளனர். நடராசசபை உள்ளது. நடராசர் அழகான மூர்த்தி. இத்தலத்தில்
நவக்கிரகங்கள் ஒரே வரிசையில் உள்ளன. மூலவருக்குத் தென்பால்
தியாகராஜ - நீலவிடங்கர் சந்நிதியுள்ளது. வடபால் வேதாரண்யேஸ்வரர்
தரிசனம் தருகிறார். மூலவர் அழகான தோற்றம்.

     கோஷ்டத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி ரிஷபத்தின் மேலுள்ளார்.
ஐப்பசி மாதப்பிறப்பன்று தியாகராஜருக்கு விசேஷ அபிஷேகம்
நடைபெறுகின்றது. இத்தலத்திற்குப் பக்கத்தில் எட்டுக்குடி, திருக்கோளிலி
முதலிய தலங்கள் உள்ளன.

     “வெந்தழல் வடிவினர் பொடிப்பூசி
          விரிதரு கோவண உடை மேலோர்
     பந்தஞ் செய்து அரவசைத்து ஒலிபாடி
          பலபல கடைதொறும் பலிதேர்வார்
     சிந்தனை புகுந் தெனக்கு அருள் நல்கிச்
          செஞ்சுடர் வண்ணர்தம் அடிபரவ
     வந்தனை பலசெய இவராணீர்
          வாய்மூர் அடிகள் வருவாரே.”           (சம்பந்தர்)