பக்கம் எண் :

734 திருமுறைத்தலங்கள்


     “வேதாரண்யம் விளக்கு அழகு” என்பது பழமொழி. அப்பர் சுவாமிகள்
‘தூண்டு சுடரனைய சோதி கண்டாய்’ என்று பாடுகிறார். இன்றும் கோயிலில்
விளக்குகளின் பேரொளியைக் காணலாம். பரஞ்சோதி முனிவர், தாயுமானவர்
ஆகியோர் அவதரித்த தலம். சித்தர் சிவப்பிரகாசர், திருவாவடுதுறை ஆதீன
முதற்குரவர் ஸ்ரீ நமச்சிவாய மூர்த்திகளுக்கு இத்தலத்தில்தான் அருளுபதேசம்
செய்தார் என்பது வரலாறு. அகத்தியர், முசுகுந்தன், கௌதமர்,
விசுவாமித்திரர், வசிட்டர், நாரதர், பிரமன், மாந்தாதா முதலியோர்
வழிபட்டது. அகத்தியருக்குத் திருமணக்காட்சியருளிய பதி.

     இறைவன் - மறைக்காட்டீசுவரர், வேதாரண்யேசுவரர்,
              வேதவனேசர், வேதாரண்யநாதர்.
     இறைவி - வீணாவாதவிதூஷணி, யாழைப்பழித்த மொழியம்மை
     தலமரம் - வன்னி (இம்மரத்தடியில் விசுவாமித்திரர் தவஞ்
              செய்ததாக வரலாறு)
     தீர்த்தம் - வேததீர்த்தம் (எதிரில் உள்ள கடல்)
              தியாகராஜா - புவனி விடங்கள், மரகதத்திருமேனி
     நடனம் - ஹம்சபாத நடனம்
     பீடம் - ரத்தினசிம்மாசனம்

     மூவர் பாடல் பெற்ற தலம்.

     இராசகோபுரம் ஐந்து நிலைகளுடன் கிழக்கு நோக்கியது. முன்
மண்டபத்தின் பக்கத்தில் தலமரம் வன்னி உள்ளது - அடியில் எண்ணற்ற
நாகப்பிரதிஷ்டைகள். எதிரில் தீர்த்தமுள்ளது. உள்சுற்றில் அறுபத்துமூவர்,
இராமநாதலிங்கம் உள்ளன. வெளிப்பிராகாரத்தில் இராமரை தொடர்ந்து வந்த
வீரஹத்திபாவத்தைப் போக்கி வீரஹத்தி விநாயகர் - பக்கத்தில் குமரன்
சந்நிதி. சேர சோழ பாண்டிய லிங்கங்கள் தனித்தனியே மூன்று சந்நிதிகளாக
உள்ளன. புன்னைமரத்தடியில் நசிகேது, சுவேத கேது ஆகியோரின்
மூலத்திருமேனிகளைக் காணலாம்.

     சுவாமிக்குப் பக்கத்தில் அம்பாள் சந்நிதி (கிழக்கு நோக்கி) உள்ளது -
தனிக்கோயில். உள்வலமாக வரலாம். முன்மண்டபத்தின் மேற்புறம் வண்ண
ஓவியங்கள் உள்ளன. தலவிநாயகர், காட்சி கொடுத்த நாயனார், ஆறுமுகர்,
ஜ்வரதேவர், சனிபகவான், வீணையில்லாத சரஸ்வதி, அன்னபூரணி, துர்க்கை,
சோழீஸ்வரலிங்கம் முதலிய சந்நிதிகள் உள்ளன.