பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 735


இங்குள்ள நடராசசபை - தேவசபை எனப்படும். நவக்கிரகங்கள் - இத்தலம்
கோளிலித் தலங்களுள் ஒன்றாதலின் - வரிசையாகவுள்ளன. பள்ளியறையை
அடுத்துப் பைரவர், சூரிய சந்திரர்கள் சந்நிதிகள். உள்வலமுடித்துப் படிகளேறி
முன்மண்டபத்தை யடைந்தால் தியாகராஜா சபை. விடங்கர், பெட்டிக்குள்
பாதுகாப்பாகவுள்ளார்.

     உள் வாயிலைக் கடந்தால் இருபுறமும் உற்சவத் திருமேனிகள்
பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. சுதையாலான துவாரபாலகர்களைத் தொழுது
உட்சென்றால் மூலவர் தரிசனம்.

     மூலவர் - வேதாரண்யேசுவரர் - சிவலிங்கத் திருமேனி, சுவாமிக்குப்
பின்னால் ‘மறைக்காட்டுறையும் மணாளர்’ திருமணக் கோலத்தில் காட்சி
தருகிறார். இம்மணாளருக்கு ஆண்டுக்கொருமுறை தான் திருமஞ்சனம்.
திருமஞ்சனம் முடிந்ததும் சந்தனக்காப்பு சார்த்தப்படும். அஃது அடுத்த
திருமஞ்சனத்தின் போதுதான் களையப்படும். ஆகவே மணாளர், சந்தனக்
காப்பு மணத்தில் ஆண்டுதோறும் காட்சியளிக்கிறார் என்பது விசேஷமான
செய்தியாகும்.

     மரகத விடங்கருக்கு நாடொறும் திருமஞ்சனமுண்டு. வீதியுலாவில்,
தியாகேசர் புறப்படாத நாள்களில் சந்திரசேகரரே எழுந்தருளுகிறார்.
தியாகேசருக்குப் பதிலாக இவருக்குப் பட்டம் கட்டும் நாளை “சந்திரசேகரப்
பட்டம்” என்பர். “பட்டம் கட்டிய சென்னிப் பரமர்” என்பது தேவாரம்.
இக்கோயிலில் 92 கல்வெட்டுக்கள் - சோழர் காலத்தியவை - கண்டெடுக்கப்
பட்டுள்ளன. இறைவனை ‘வேதவனமுடையார்’ என்று கல்வெட்டு
குறிப்பிடுகிறது.

     யாழ்ப்பாணத்து ‘சின்னத்தம்பி நாவலர்’ என்பவர் இத்தலத்துப்
பெருமான்மீது “மறைசை அந்தாதி” பாடியுள்ளார்.

     அண்மையில் உள்ள தலங்கள் (1) கோடிக்கரை (2) அகத்தியான் பள்ளி
முதலியன. யாழ்ப்பாணம் வரணி, ஆதீனத்தைச் சேர்ந்த இத் திருக்கோயிலின்
நிர்வாகம் தமிழ்நாடு இந்து அறநிலையத் துறையுடன் இணைந்து
நடைபெறுகின்றது. நாடொறும் ஆறுகால வழிபாடுகள் 14.7.2000ல்
கும்பாபிஷேகம் நடந்துள்ளது.

     “குரவம் குருக்கத்திகள் புன்னைகண் ஞாழல்
     மருவும் பொழில் சூழ்மறைக் காட்டுறை மைந்தா
     சிரமமும் மலருந் திகழ் செஞ்சடை தன்மேல்
     அரவம் மதியோடடை வித்தலழகே.”       (சம்பந்தர்)