243 / 126. அகத்தியான்பள்ளி அகஸ்தியம்பள்ளி | சோழநாட்டு (தென்கரை)த் தலம். மக்கள் ‘அகஸ்தியம் பள்ளி’ என்று வழங்குகின்றனர். வேதாரண்யத்தி லிருந்து கோடிக்கரை செல்லும் வழியில் 1 1/2 கி.மீ. ல் உள்ளது. (இதையடுத்து உள்ளது கோடிக்கரையாகும்.) சாலையோர ஊர் - இத்திருக்கோயிலை சிவன் கோயிலை - இங்குள்ள மக்கள் அகஸ்தியர் கோயில் என்றே கூறுகின்றனர். நெடுஞ்சாலைத் துறையின் பெயர்ப் பலகையும் அகஸ்தியர் கோயில் என்றே எழுதப்பட்டுள்ளது. அகஸ்தியர் இறைவனின் திருமணக் கோலங்காணத் தவஞ்செய்த பதி. எமன் வழிபட்ட சிறப்புடையது. கிழக்கு நோக்கிய கோயில் நகரத்தார் திருப்பணி. இறைவன் - அகத்தீஸ்வரர் இறைவி - மங்கைநாயகி தலமரம் - வன்னி தீர்த்தம் - அகத்திய தீர்த்தம் (கோயிலின் மேற்பாலுள்ளது) அக்னி தீர்த்தம் (கடல்) அருகாமையில் உள்ளது. சம்பந்தர் பாடல் பெற்றது. சுவாமி சந்நிதியில் உள்ள குளம் அக்னி புஷ்கரணி எனப்படுகிறது. ராஜகோபுரம் மூன்று நிலைகளையுடையது. சுவாமி கிழக்கு நோக்கியும் அம்பாள் மேற்கு நோக்கியும் காட்சி தருகின்றனர். அம்பாள் கோயிலுக்குப் பக்கத்தில் சுவாமியைப் பார்த்தவாறு அகத்தியர் கோயில் உள்ளது. இராசராசன் மாறவர்மன் குலசேகரன் ஆகியோர் காலத்துக் கல்வெட்டுக்கள் இக்கோயிலுக்கு உள்ளன. “வாடிய வெண்டலை மாலைசூடி மயங்கிருள் நீடுயர் கொள்ளி விளக்குமாக நிவந்தெரி ஆடிய எம்பெருமான் அகத்தியான் பள்ளியை பாடிய சிந்தையினார்கட்கு இல்லையாம் பாவமே.” (சம்பந்தர்) - “நாடும்எனை நின் அகத்தியான்பள்ளி நேர்ந்தேன் என்று ஆட்கொண்ட தென் அகத்தியான் பள்ளிச் செம்பொன்னே.” (அருட்பா) |