பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 741


245/1. திருஆலவாய்

மதுரை

     பாண்டிய நாட்டுத் தலம்.

     புகைவண்டி நிலையம். தமிழகத்தின் தலைசிறந்த பெரிய நகரங்களுள்
ஒன்று. தென்பாண்டி நாட்டின் தலைநகர். தமிழ் வளர்த்த தலம். வைகைக்
கரையில் அமைந்த வளமிக்க பதி. மாவட்டத் தலைநகரம்.
சென்னையிலிருந்தும் தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்தும் புகைவண்டிகள்
மூலமாகவும் பேருந்துகள் மூலமாகவும் வருவதற்கு நிரம்ப வசதிகள் உள்ளன.

     புலவர்களுடன் இறைவனும் ஒருவராயிருந்து தமிழ்ச் சங்கத்தில்
தமிழாராய்ந்த தனிச்சிறப்புடைய தலம். இறைவன் அறுபத்துநான்கு
திருவிளையாடல்களை - அற்புதச் செயல்களை நிகழ்த்திய அரிய தலம்.
மங்கையர்க்கரசியாரும், அமைச்சர் குலச்சிறையாரும் சைவம் காத்து
மன்னனான கூன் பாண்டியனின் வெப்பு நோயை ஞானசம்பந்தர் மூலம்
தீர்த்து வைத்து அவனை நின்றசீர் நெடுமாறனாக மாற்றிய அற்புதத் தலம்.
கபிலர் பரணர் நக்கீரர் முதலிய தமிழ்ப் புலவர்கள் வாழ்ந்த பதி. தமிழ்ச்
சங்கம் அமைந்த தலம். மூர்த்தி நாயனார் வாழ்ந்த ஊர். இவ்விறைவனே
பாண பத்திரர் மூலம் சேரமான் பெருமாளுக்குத் திருமுகப்பாசுரம்
தந்தருளியவர். திருஞானசம்பந்தர், அனல், புனல் வாதங்களை நிகழ்த்தி,
சைவத்தைத் தழைக்கச் செய்த தண்பதி. பல்வேறு இலக்கியங்களும்
பாராட்டுகின்ற பதி. யோகநிலையில் இத்தலம் ‘துவாத சாந்தத் தலம்’
எனப்படும். பஞ்ச சபைகளுள் இத்தலம் வெள்ளிச்சபை எனப்
போற்றப்படுகிறது. வரகுண பாண்டியனுக்காக இறைவன் கால் மாறி ஆடிய
அற்புதம் இத்தலத்தில்தான் நிகழ்ந்தது. சங்ககாலப் புகழ்பெற்ற தங்கப்பதி.
இறைவியே தடாதகையாக அரசாண்ட தலம். முப்பெருஞ் சக்தி பீடங்களுள்
ஒன்று. திருஞானசம்பந்தர் இத்தலத்தில் வந்து தங்கியிருந்து சைவம்
பெருக்கிய திருமடாலயம் - மிகப் பழமையான ஆதீனம் (மதுரை
திருஞானசம்பந்தர் ஆதீனம்) தெற்காவணி மூலவீதியில் உள்ளது.

     குமரகுருபர சுவாமிகள் இத்தலத்துப் பெருமாட்டியின் (மீனாட்சியம்மை)
மீது பிள்ளைத் தமிழ், குறம், கலம்பகம் முதலிய பலவகைப் பிரபந்தங்களைப்
பாடியுள்ளார். மாநகராட்சி தகுதியில் உள்ள மக்கட்செறிவு கொண்ட மிகப்
பெரிய நகரம். இங்குக் காமராசர் பல்கலைக் கழகம்