உள்ளது. ஊரின் பெயர் - மதுரை. கோயிலின் பெயர் - ஆலவாய். சிவராசதானி, பூலோக கயிலாயம், கடம்பவனம், கூடல், நான்மாடக் கூடல் என்பன இத்தலத்திற்குரிய வேறு பெயர்கள். நாகம் உமிழ்ந்த விஷத்தை இறைவன் அமுதத்தால் மாற்றி மதுரமாக்கினமையால் இத்தலம் மதுரை என்று பெயர் பெற்றதென்பர். இறைவன் - சோமசுந்தரக்கடவுள், சொக்கலிங்கநாதர், சொக்கேசர், ஆலவாய் அண்ணல், சொக்கநாதர். இறைவி - மீனாட்சி, அங்கயற்கண்ணி. தலமரம் - கடம்பு தீர்த்தம் - பொற்றாமரைக்குளம் . கோயிலுள் உள்ளது. ஞானசம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற பழம்பதி. இத்தலத்தின் சிறப்புக்கள் திருவாசகத்துள் புகழ்ந்தோதப்பட்டுள்ளன. இக்கோயில் மிகவும் பரப்புடையது- பெரியது, விண்ணிழி விமானம். சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் அழகிய கோபுரங்களை நாற்புறமும் பெற்றுள்ள நகரம் தெற்குக் கோபுரமே பிறவற்றினும் உயர்ந்தது. கோயில் நகரின் நடுவே அமைந்துள்ளது. கோயிலை மையமாகக் கொண்டே இத்தலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கோயிலுள் அன்னை மீனாட்சிக்கே முதலில் வழிபாடு நடைபெறுகிறதாதலின் அன்பர்கள் பலரும் கீழ வீதியிலுள்ள அம்பாள் சந்நிதி வாயில் வழியாகவே ஆலயத்துள் செல்வர். மிகப் பெரிய கோபுரம். ஏராளமான சிற்பங்கள், சிற்பக்கலை அழகுடையவை. இக்கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தால் முதலில் உள்ளது அஷ்டசக்தி மண்டபம். வாயிலில் மீனாட்சி கல்யாணச் சிற்பம் சுதை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. பெயருக்கேற்ப எட்டு பெருந்தூண்கள் எட்டு சக்திகளின் வடிவங்களை அழகுறப் பெற்றுள்ளன. திருவிளையாடற் புராணக் காடசிகள் பல இதில் இடம் பெற்றுள்ளன. அடுத்துள்ள நாயக்கர் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள எண்ணற்ற விளக்குகளைக் கொண்ட பித்தளையாலான திருவாசி கண்களைக் கவருகின்றது. அடுத்துள்ள வழியே சென்றால் பொற்றாமரைக் குளத்தை அடையலாம். மிகப் பெரிய குளம் இந்திரன் தன் வழிபாட்டிற்காகப் பொன்மலர் பறித்த குளம் இது வென்பர். திருக்குறள் நூலை இக்குளத்தில் சங்கப் பலகையில் வைத்துத்தான் சங்கப் புலவர் ஏற்றுக் கொண்டதாக ஒரு வரலாறும் உண்டு. அழகிய படிக்கட்டுக்கள் உள்ள இக்குளத்தின் வடக்குக் கரையில் உள்ள |