தூண்களில் சங்கப் புலவர்களின் உருவங்கள் உள்ளன. தென்கரை மண்டபத்தில் திருக்குறட்பாக்கள் முழுவதும் சலவைக் கற்களில் பொறித்துப் பதிக்கப்பட்டுள்ளன. பொற்றாமரைக் குளத்தின் மேற்கே ஊஞ்சல் மண்டபம் உள்ளது. அழகான கண்ணாடி அறை. வெள்ளிதோறும் மாலையில் சுவாமி அம்பாள் பொன்னூசல் நடைபெறுகிறது. அடுத்துள்ள கிளிக்கூட்டு மண்டபம் அழகான சிற்பக்கலையழகுடையவை. பாண்டவர்கள், வாலி, சுக்ரீவன், திரௌபதி, புருஷாமிருகம் முதலிய சிற்பங்கள் இங்குள்ளன. மண்டபத்தின் மேற்பகுதியில் தெய்வங்களின் பல்வேறு தோற்றங்களும், மீனாட்சி கல்யாணமும் வண்ணச் சித்திரங்களாக எழுதப்பட்டுள்ளன. அம்பாள் சந்நிதி வெளிப் பிரகாரத்தில் திருமலை நாய்க்கர், இருதுணைவியாருடன் உள்ள சுதையாலான சிற்பங்கள் உள்ளன. அருணகிரிநாதரின் திருப்புகழ்ப் பாடல்கள் குமரன் சந்நிதியில் செதுக்கப்பட்டுள்ளன. இப்பிராகாரத்தில் உள்ள ஆறுகால் பீடத்தில்தான் குமரகுருபர சுவாமிகள் பாடியருளிய மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் அரங்கேற்றம் செய்யப்பட்டதென்பர். மகாமண்டபத்தில் ஐராவதவிநாயகர் சந்நிதியும் முருகப் பெருமான் சந்நிதியும் உள்ளன. அம்பாள்-மீனாட்சி கையில் கிளியுடன் செண்டு ஏந்தி நின்ற திருக்கோலத்தில் நமக்கு அருட்காட்சி வழங்கும் அற்புதம்- அனுபவித்தோர்க்கே அருமை தெரியும். திங்கள்தோறும் அம்பிகைக்குத் தங்கக்கவசம், வைரக்கிரீடம் சார்த்தப்படுகிறது. அம்பாளை வணங்கிய பின், கிளிக்கூட்டு மண்டபம் வழியாக வந்து கோபுரவாயிலை கடந்து சுவாமி சந்நிதிக்குப் போகும் நமக்கு எதிரில் முக்குறுணி விநாயகர் தரிசனம் கிடைக்கின்றது. எட்டு அடி உயரமுள்ள மிகப்பெரிய திருமேனி. பிராகாரத்தில் சங்கப்புலவர், சம்பந்தர் சந்நிதிகள் உள்ளன. சுவாமி சந்நிதிக்கு எதிரில் உள்ள கம்பத்தடி மண்டபம் சிற்பக் கலையின் கருவூலம் எனலாம். மண்டபத்தின் நடுவில் தங்கக் கொடி மரமும் நந்தியும் பலிபீடமும் உள்ளன. சுற்றிலும் உள்ள எட்டுத் தூண்களிலும் அற்புதமான சிலைகள் உள்ளன. சங்கரநாராயணர், சோமாஸ்கந்தர், அர்த்தநாரீஸ்வரர் போன்ற தோற்றங்களும் திருமாலின் தசாவதாரக் காட்சிகளும் அற்புதமானவை. இவற்றுக்கு முத்தாய்ப்பு அமைந்துள்ளது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணச் சிற்பமாகும். இச்சிற்ப அழகை எங்ஙனம் வருணிப்பது? அவ்வளவு தத்ரூபமான அமைப்பு. கம்பத்தடி மண்டபத்திற்குப் பக்கத்தில் இரு பெரிய தூண்களில் வடிக்கப்பட்டுள்ள (1) அக்கினி வீரபத்திரர் (2) அகோர |