வீரபத்திரர் சிலாரூபங்களும் ; அடுத்துள்ள தூண்களிலுள்ள (1) ஊர்த்துவதாண்டவர் (2) காளியின் சிலாரூபங்களும் கொள்ளையழகுடையன. சுவாமி சந்நிதிக்குச் செல்லும் வாயிலில் இரு பெரிய துவார பாலகர்கள் கம்பீரமாகக் காட்சி தருகின்றனர். உள் நுழைந்ததும் பிராகாரத்தில் திருவிளையாடற்புராணம் அரங்கேற்றம் செய்யப்பட்ட ஆறுகால் பீடம் உள்ளது. அறுபத்துமூவர் தரிசனம், கலைமகள் சந்நிதி உள்ளது. காசிவிசுவநாதர், பிட்சாடனர், சித்தர், துர்க்கைச் சந்நிதிகளும் உள்ளன. கடம்பமரம்-தலமரம், வெள்ளிக் கவசமிட்டுப் பாதுகாக்கப்பட்டு கனகசபையும், யாகசாலையும், சாட்சி சொல்லிய வன்னி கிணறும் அடுத்தடுத்து உள்ளன. வெள்ளியம்பலம், கால்மாறி ஆடிய அம்பலக் கூத்தனின் அற்புத நடன அழகு. தரிசித்து உள்ளே சென்று சோமசுந்தரப் பெருமானைக் காண்கின்றோம். சுவாமியின் கருவறை - இந்திர விமானம், விண்ணிழி விமானம் என்றழைக்கப்படுகிறது. அஷ்டதிக்கு யானைகளும் முப்பத்திரண்டு சிங்கங்களும், அறுபத்துநான்கு பூதகணங்களும் தாங்கும் அமைப்பில் இவ்விமானம் அமைக்கப்பட்டுள்ளது. மூலவர் - சிவலிங்கத் திருமேனி. ஆலவாய் அழகன் - அழகு மிளிரக் காட்சி தருகிறார். சிறிய திருமேனி. இம்மூர்த்தி தொடர்பான ஒரு செய்தி :- கி.பி.1330-ல் முகமதிய படையெடுப்பு நடைபெற்றபோது மன்னனாக இருந்த பராக்கிமபாண்டியன் காளையார் கோயில் சென்றுவிட்டார். கோயில் ஸ்தானிகர் சிவலிங்கத்தை மூடி, கிளிக்கூடு வைத்து மணலைப்பரப்பி, கருவறை வாயிலையும் கல்லினால் அடைத்து, முன்புள்ள அர்த்தமண்டபத்தில் வேறொரு சிவலிங்கத்தை வைத்து விட்டனர். படையெடுத்து வந்த முகமதிய மன்னன் முன்னால் இருந்த சிவலிங்கத்தை நிஜமானதென்றெண்ணித் தாக்கிச் சிதைத்தான். படையெடுப்பு முடிந்து 48 ஆண்டுகள் கழித்து கம்பண்ணர் படையெடுத்து வந்து முகமதியரை வென்று, கோயில் வந்து ஸ்தானிகருடன் தோண்டிப் பார்க்க ; சுவாமி மேற்பூசிய சந்தனம் மணம் மாறாமல், பக்கத்தில் ஏற்றிவைத்த 2 வெள்ளி விளக்குகளும் சுடர் எரிந்து கொண்டிருந்தனவாம் ; அன்றிருந்து சுவாமிக்கு இன்றுவரை முறையாகப் பூஜைகள் நடைபெறுகின்றனவாம். இக்கோயிலில் உள்ள ஆயிரக்கால் மண்டபம் மிகவும் பெரியது. மண்டப வாயிலின் மேற்புறத்தில் தமிழ் ஆண்டுகள் அறுபதையும் |