குறிக்கும் சக்கரம் வரையப்பட்டுள்ளது. இங்குள்ள பிட்சாடனர் குறவன் குறத்தி முதலிய ‘சிற்ப அழகு மிக்க சிலைகள் காணத் தெவிட்டாத கலைச்சுவையுடையன. மண்டபத்தில் எங்கு நின்று நோக்கினாலும் இத்தூண்கள் அனைத்தும் ஓர் ஒழுங்கான வரிசையில் இருப்பதைக் கண்டு வியக்கிறோம். இங்கு நிருத்த கணபதி, சரஸ்வதி, அர்ச்சுனன், ரதி, மோகினி, மன்மதன், கலிபுருடன் முதலிய பல சிற்பங்களும் உள்ளன. இங்குள்ள நடராசரின் சிலை அற்புதமானது. இம்மண்டபத்தில் “கலைக் காட்சியகம்” நடத்தப்பட்டு வருகிறது. தெய்விகத் திருமேனிகளையும், தொல்பொருள்களையும் இங்குக் கண்டு மகிழலாம். ஆயிரக்கால் மண்டபத்திற்குப் பக்கத்தில் மங்கையர்க்கரசி பெயரால் புதிய மண்டபமொன்று அமைக்கப்பட்டுள்ளது. இதில் கூன்பாண்டியன், மங்கையர்க்கரசி, ஞானசம்பந்தர், குலச்சிறையார் ஆகியோருடைய உருவங்கள் உள்ளன. சிவலிங்கத் திருமேனி ஒன்றும் நடுவிலுள்ளது. இதனையொட்டி மருதுபாண்டியர் கட்டிய சேர்வைக்காரர் மண்டபமும், அழகிய மரவிதானங்கொண்ட கல்யாண மண்டபமும் உள்ளன. சுவாமி அம்பாள் புறப்பாடு நிகழும் வீதி ‘ஆடிவீதி’ எனப்படுகிறது. வடக்கு ஆடிவீதியில் பெரிய கோபுரத்தையடுத்து ஐந்து இசைத்தூண்கள் உள்ளன. ஒவ்வொரு தூணிலும் 22 சிறு தூண்கள். இவைகளைத் தட்டினால் விதவிதமான இனிய ஓசை எழுகின்றது. இசைத்தூண்களின் அமைப்பும் அழகும் மிகவும் அதிசயமானவை. கிழக்குக் கோபுரத்திற்கு எதிரில் வசந்த மண்டபம் உள்ளது. இதைப் புதுமண்டபம் என்கின்றனர். திருமலை நாய்க்கர் கட்டியது. இதில் தடாதகைப் பிராட்டி, மீனாட்சி திருமணம், திருமலை நாய்க்கர், கல்யானை கரும்பு தின்னுவது, இராவணன் கயிலையைத் தூக்குவது முதலிய பல சிற்பங்கள் உள்ளன. புதுமண்டபத்தின் எதிரே ராயகோபுரம் முடிவு பெறாத நிலையில் உள்ளது. மதுரை செல்வோர் அனைவரும் திருமலை நாய்க்கர் மகாலைக் கண்டு மகிழவேண்டும். திருமலை நாய்க்கர் தம் தலைநகரை திருச்சியிலிருந்து மதுரைக்கு மாற்றியபோது இதைக் கட்டியதாகத் தெரிகிறது. செங்கல், வெண்சுதைச்சாந்து ஆகியவற்றைக் கொண்டே (மரம் முதலியவற்றின் தொடர்பின்றிக்) கட்டப்பட்டுள்ள இம்மகால் அழகு வேலைப்பாடுடையது. மதுரையில் உள்ள மாரியம்மன் தெப்பக்குளம் - (வண்டியூர் தெப்பக்குளம்) மிகவும் பெரிய அழகான குளமாகும். இங்குத் தைப்பூசத்தன்று |