பக்கம் எண் :

746 திருமுறைத்தலங்கள்


     நடைபெறும் தெப்பத் திருவிழா மிகச்சிறப்புடையதாகும்.
திருமாலிருஞ்சோலை (அழகர் கோயில்), பழமுதிர்சோலை, திருப்பரங்குன்றம்
முதலியவை அண்மையிலுள்ள தரிசிக்கத் தக்க தலங்களாகும்.

     சித்திரைப் பௌர்ணமியன்று அழகர் வைகையாற்றில் வந்து இறங்கும்
திருவிழா இத்தலத்துச் சிறப்பானதொரு திருவிழாவாகும். 3600 ஆண்டுகளுக்கு
மேற்பட்ட பழைமையுடைய பதி, இம்மதுரையாகும். ஞானசம்பந்தர் காலத்தில்
சுவாமி கோயில் மட்டுமே இருந்ததாகத் தெரிகின்றது.

     மதுரையை ஆண்ட சடையவர்மன் குலசேகரபாண்டியன் 12ஆம்
நூற்றாண்டில் மீனாட்சியம்மைக்குத் தனிக்கோயில் எடுப்பித்தான் என்று
தெரிகிறது. 13ஆம் நூற்றாண்டில் மாறவர்மன் சுந்தர பாண்டியன்
கீழ்க்கோபுரத்தைக் கட்டிச் சுற்று மதில்களை அமைத்தான். 14ஆம்
நூற்றாண்டில் பராக்கிரம பாண்டியனால் மேற்குக் கோபுரம் கட்டப்பட்டது.
16ஆம் நூற்றாண்டில் செவ்வந்திச் செட்டியார் தெற்குக் கோபுரத்தைக்
கட்டினார். ஆயிரக்கால் மண்டபத்தை அரியநாத முதலியார் அமைத்தார்.
17ஆம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட திருமலைநாய்க்கர் காலத்தில்
புதுமண்டபம், அஷ்டசக்தி மண்டபம், கிளிக்கூட்டு மண்டபம் முதலியன
கட்டப்பட்டன. ஆடிவீதிகளில் உள்ள சுற்று மண்டபங்கள் இராணி
மங்கம்மாள் அவர்களால் கட்டப்பட்டன.

     இவ்வாறு நூற்றாண்டுகள் தொறும் வளர்ச்சி பெற்று ‘ஆலவாய்’ இன்று
முழுமை பெற்றுப் பெருஞ்சிறப்புடன் திகழ்கின்றது. மன்னர்களும்
செல்வந்தர்களும் இத்திருக்கோயிலின் திருப்பணிகளில் ஈடுபட்டுச் செய்து
வந்துள்ள தொடரில், தமிழவேள் திரு. பி.டி.ராஜன் அவர்கள் தலைமையில்
1960-63ல் மேலும் திருப்பணிகள் செய்யப்பட்டு, அனைத்துக் கோபுரங்களும்
புதுப்பிக்கப்பட்டன. மங்கையர்க்கரசியார் மண்டபம் புதிதாகக் கட்டப்பட்டது.
ஒவ்வொரு தமிழ் மாதம் முதல்நாளில் தங்கரதம் புறப்பாடு நடைபெறுகின்றது.
பெருவிழாக்களும் மற்ற மாதாந்திர விழாக்களும் முறையாக நடைபெறுகின்றன.

   
“மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவைவரி வளைக்கைம்மடமானி    பங்கயச் செல்வி பாண்டிமாதேவி பணிசெய்து நாடொறும் பரவப்
   பொங்கழலுருவன் பூதநாயகன் நால்வேதமும் பொருள்களும் அருளி
   அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவாயாவதும்இதுவே.”
                                            (சம்பந்தர்)