“நலந்திகழ் வாயின் நூலாற் சருகிலைப் பந்தர் செய்த சிலந்தியை அரசதாள அருளினாய் என்று திண்ணம் கலந்துடன் வந்து நின்தாள் கருதி நான் காண்பதாக அலந்தனன் ஆலவாயில் அப்பனே அருள் செயாயே.” (அப்பர்) “பாலவாய் நிற்கும் பரையோடு வாழ்மதுரை ஆலவாய்ச் சொக்கழ கானந்தமே”- (அருட்பா) அஞ்சல் முகவரி :- அ/மி.மீனாட்சியம்மை சமேத சோமசுந்தரப் பெருமான் திருக்கோயில் மதுரை - 625 001. 246/2. திருஆப்பனூர் ஆப்புடையார் கோயில் | பாண்டிய நாட்டுத் தலம். தற்போது ஆப்புடையார் கோயில் என்று வழங்குகிறது. மதுரையில் மீனாட்சியம்மன் கோயிலுக்குப் பக்கத்தில் வையை ஆற்றுக்கு அருகில் உள்ளது. நகரப் பேருந்து மதுரைப் பேருந்து நிலையத்திலிருந்து செல்கிறது. சோழாந்தகன் என்னும் பாண்டிய மன்னன் பொருட்டு ஓர் ஆப்பினிடத்தில் இறைவன் வெளிப்பட்ட தலம். அர்ச்சகர் ஒருவர் உலையில் இட்ட வையை ஆற்று மணலை இறைவன் அன்னமாக ஆக்குவித்த அற்புதப் பதி. இதனாலேயே இங்கு இறைவனுக்கு “அன்னவிநோதன்” என்ற பெயருண்டாயிற்று. இறைவன் - இடபுரேசர் (ரிஷபுரரேசர்), அன்னவிநோதன், ஆப்புடையார். இறைவி - குரவங்கழ் குழலி தீர்த்தம் - வையை, இடபதீர்த்தம் சம்பந்தர் பாடல் பெற்றது. இக்கோயிலில் உள்ள நடராசர், சிவகாமி ஆகிய மூர்த்தங்கள் பெரியதாகவும், கலையழகு மிக்கதாயும் உள்ளன. |