பக்கம் எண் :

752 திருமுறைத்தலங்கள்


                                   -“வானவர்கோன்
     தேமேடகத்த னொடுசீதரனும் வாழ்த்துஞ்சீர்
     ஆமே டகத்தறி வானந்தமே.”          (அருட்பா)

அஞ்சல் முகவரி :-

     அ/மி.ஏடகநாதேஸ்வரர் திருக்கோயில்
     திருவேடகம் & அஞ்சல் - 624 234
     மதுரை மாவட்டம்.

249/5. கொடுங்குன்றம்

பிரான்மலை

     பாண்டிய நாட்டுத் தலம்.

     தற்போது மக்கள் வழக்கில் ‘பிரான்மலை’ என்று வழங்கப்படுகிறது.
மதுரையில் உள்ள அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டுப்
பொன்னமராவதி செல்லும் பேருந்துகள் பிராமன்மலை வழியாகச் செல்கின்றன.
மதுரையிலிருந்து சிங்கம்புணரி, மேலூர் ஆகிய ஊர்களுக்குச் சென்றால்
அங்கிருந்து பிரான்மலைக்குப் பேருந்துகள் உள்ளன. மதுரையிலிருந்து
சிங்கம்புணரி சென்றால் அங்கிருந்து பிரான்மலைக்கு அடிக்கடி பேருந்துகள்
செல்கின்றன.

     சம்பந்தர் பாடல் பெற்ற தலம்.

     பிரான் மலை - மலையின் சரிவில் கோயில் உள்ளது. கோயிலுக்குச்
செல்லும் வழியில் உள்ள பெரிய குளம் “அடையாளஞ்சான் குளம்” என்று
கொச்சையாக வழங்கப்படுகிறது. கோயிலின் முன் மண்டபம் உள்ளது. தெற்கு
நோக்கிய நுழைவு வாயிலின் உள்புகுந்து படிக்கட்டுகள் ஏறிக் கோயிலை
அடையவேண்டும். வலம்புரி விநாயகரைத் தரிசித்து இடப்பால் திரும்பி,
படிகளேறி, சந்நிதி நுழையும் முன் ஏகாந்த விநாயகரைத் தரிசித்து
உட்சென்றால் நடராச மண்டபம் உள்ளது.

     இறைவன் - உமாமகேஸ்வரர், மங்கைபாகர்.
     இறைவி - தேனாம்பிகை, தேனாம்பாள்.