மேலேயுள்ள மூலவர் உருவங்கள் கல்யாண கோலத்தில் உள்ளன. இவை குகையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ளன. எதிரில் சிறிய சிவலிங்கம் உள்ளது. இதை ‘உடையவர்’ என்றழைக்கின்றனர். பெருமானைத் தரிசித்து வெளி வந்து கீழிறங்கின் வலப்பால் தனியே பைரவர் சந்நிதி உள்ளது. துவாரபாலகர்கள் இருபுறமும், மூலவரான பைரவர் நின்ற கோலத்தில் காட்சிதருகிறார். உற்சவ (பைரவர்)த் திருமேனியும் உள்ளது. விசுவநாதர் விசாலாட்சி சந்நிதி உள்ளன. பைரவர் கோயிலை வலமாக வந்து, மலைக் கற்கள் மீதேறி வெளிவலமாக வரலாம். கீழிறங்கி வரும்போது வலப்பால் ‘கடோரகிரீஸ்வரர்’ சந்நிதி உள்ளது. இறைவன் - கொடுங்குன்றநாதர், கடோரகிரீஸ்வரர். இறைவி - குயிலமுதநாயகி, அமிர்தேஸ்வரி. கிழக்கு நோக்கிய சந்நிதி. பாடல் பெற்ற சந்நிதி இதுவே. கடோரகிரீஸ்வரர் மூலவர் - மிகச் சிறிய லிங்கம். வலமாக வரும் போது அறுபத்துமூவர் மூலமூர்த்தங்களும், விநாயகர், அம்மையப்பர் சந்நிதிகளும் உள்ளன. அம்பாள் சந்நிதி - நின்ற கோலம், நவக்கிரக சந்நிதிகளில் அனைத்தும் அமர்ந்த நிலையில் உள்ளன. கோயில் மண்டபங்கள் முழுவதும் நன்கு கட்டமைந்துள்ளன. இக்கோயிலில் மேற்புறம், நடுப்புறம், இடப்புறம் ஆகிய மூன்று அமைப்புக்கள் சொர்க்கம், அந்தரம், பூமி என்றழைக்கப்படுகின்றன. சொர்க்கத்தில் மங்கைபாகரும், அந்தரத்தில் பைரவரும், பூமியில் கடோரகிரீஸ்வரரும் எழுந்தருளியுள்ளனர். முறையாக பூஜைகள் நடைபெறுகின்றன. மேலே காரணாகம முறையிலும் கீழே காமிகாகம முறையிலும் பூஜைகள் நடைபெறுகின்றன. இக்கோயிலுக்குரிய தீர்த்தம் - தேனாழிதீர்த்தம் - கோயிலுள்ளே உள்ளது. தலமரமாக இரண்டு மரங்கள் சொல்லப்படுகின்றன. 1) உறங்காப்புளி. இது கோயிலுள் உள்ள தீர்த்தத்தின் கரையில் உள்ளது. 2) பெயரில்லா மரம், இம்மரம் மலைமீது சுவாமி (மங்கைபாகர்) சந்நிதிக்குப் பக்கத்தில் மலைக்கற்களின் இடுக்கில் உள்ளது. இதற்குப் பெயர் தெரியவில்லை. இதுகாறும் எவராலும் பெயர் தெரிந்து சொல்லப்படாமையால் இதைப் ‘பெயரில்லாமரம்’ என்றே அழைக்கின்றனர். தலம்-48 |