தீர்த்தம் - ஸ்ரீ தளி (திருத்தளி தீர்த்தம்), சிவகங்கை. (கோயிலுக்குப் பக்கத்தில் வெளியில் உள்ளது.) விசாலமான பரந்த குளம். தலமரம் - சரக்கொன்றை. சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற தலம். பெருமான் ஆடியருளிய கௌரி தாண்டவத்தைக் கண்டு இலக்குமி வழிபட்டு இத்தலத்து வேண்டிய பேற்றைப் பெற்றாள். அவள் பெருமானிடம் வேண்டியவாறே இக்கோயில் தொடர்புடைய அனைத்தும் இலக்குமி சம்பந்தமுடையதாகவே விளங்கலாயிற்று. ஸ்ரீ இலக்குமி. ஆகவே கோயில் ஸ்ரீ தளி, இறைவன் - ஸ்ரீ தளீஸ்வரர், தீர்த்தம் - ஸ்ரீ தளிதீர்த்தம் என வழங்கப்படுகின்றது. இத்திருக்கோயில் நீண்ட மதிற்சுற்றை உடைய பெரிய கோயில். முகப்பு வாயில் கிழக்கு நோக்கியது. இராஜகோபுரமில்லை - மண்டபம் மட்டுமே உள்ளது. உள்நுழைந்தால் உள்ள மண்டபத்திற்கு அநபாய சோழன் மண்டபம் என்று பெயர். வலப்பால், திருப்புத்தூர், தமிழ்ச் சங்கம் நடைபெறுகின்ற மண்டபம் உள்ளது. இக்கோயிலில் மூன்று பிரகாரங்கள் உள்ளன. வெளிப் பிராகாரத்தில் யானை மண்டபம் உள்ளது. வேப்பமரத்தடி விநாயகர் தரிசனம். எதிரில் மதிலையொட்டி நந்தவனப் பகுதிகள். கொன்றை மரங்கள் உள்ளன. அடுத்த உள்பிராகாரத்தில் நுழையும்போது செப்புக் கவசமிட்ட கொடிக்கம்பம் - சற்றுப் பெரிய நந்தி. வாயிலில் சம்பந்தர், அப்பர் பாடல்கள் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளன. வள்ளி தெய்வயானை சமேத முருகப் பெருமானின் திருக்கோல தரிசனம் மனதிற்கு மகிழ்வூட்டுகின்றது. இங்குள்ள பைரவர் சந்நிதி மிகவும் விசேஷமானது - தனிச் சிறப்பும் தனிச்சக்தியும் வாய்ந்ததாகச் சொல்லப்படுகின்றது. தனிக்கோயிலாக அழகிய விமானத்துடன் அமைந்துள்ள இப்பைரவரின் சந்நிதியில் முன்மண்டபம் மருதுபாண்டிய சகோதரர்களால் கட்டப்பட்டது. அவர்கள் இருவரின் உருவங்களும் அம்மண்டபத்தில் உள்ளன. இங்குப் பைரவர் யோகாசன நிலையில் அமர்ந்துள்ளார். இந்திரன் மகன் சயந்தன் வழிபட்டுப் பேறடைந்தான் ஆதலின் அவன் உருவம் சந்நிதிக்கு வெளியில் வாயிலில் உள்ளது. இப்பைரவப் பெருமானுக்கு நாடொறும் அர்த்தசாமத்தில் புனுகு சார்த்தப்பட்டு வடைமாலை, சம்பாநைவேத்தியம் நிவேதிக்கப்படுகிறது. “அர்த்தசாம வழிபாட்டிற்காகக் குருக்கள் மணியடித்து விட்டால் அதற்குப் பிறகு |