பக்கம் எண் :

756 திருமுறைத்தலங்கள்


     மக்கள் யாரும் பைரவர் சந்நிதிக்குப் போக கூடாது. ஏற்கெனவே
சென்றிருப்போரும் விரைந்து தரிசனம் முடித்துத் திரும்பி விடுவர்.
அர்த்தசாமத்தின்போது குருக்கள், பரிசாரகர், நைவேத்தியம் கொண்டு
செல்வோர் ஆகிய மூவர் மட்டுமே செல்வர். மற்றையோர் எவரும்
வரக்கூடாது” என்பது இத்திருக்கோயிலில் இப்பைரவர் சந்நிதியில் தொன்று
தொட்டு இருந்துவரும் ஐதீகமாகும்.

     சித்திரை முதல் வெள்ளியன்று இவருக்குத் தங்க அங்கி சார்த்தப்
படுகிறது. அடுத்த உள்பிராகாரத்தில் சூரியன், மகாலட்சுமி, வீரபத்திரர்,
உற்சவமூர்த்தங்கள், அகத்தியலிங்கம், மகாவிஷ்ணு, துர்க்கைச் சந்நிதி,
கொன்றைமரம் முதலிய சந்நிதிகள் உள்ளன. நடராசசபை மிக
அழகாகவுள்ளது. சுவரின் வெளிப்புறத்தில் வண்ணத்தில் பதஞ்சலி
முதலானோர் உருவங்கள் எழுதப்பட்டுள்ளன. இங்குப் பெருமான் ஆடும்
நடனம் கௌரிதாண்டவமாகும். இச்சபையில் வெளியில் உள்ள சிற்ப
வேலைப்பாடுடைய ஐந்து கற்றூண்களும் இசைத் தூண்களாக அமைந்துள்ளன.
சிற்பங்களைத் தட்டினால் மெல்லிய ஓசை எழுகின்றது.

     மூலவர் சந்நிதி முகப்பில் நால்வர் திருமேனிகளும், பொல்லாப்
பிள்ளையாரும், நர்த்தன விநாயகரும் ஒருபுறமும் ; வள்ளி தெய்வயானை
உடனாய சுப்பிரமணியர், திருமுறைக்கோயில் மறுபுறமும் உள்ளன.
சுதையாலான துவாரபாலகர்கள். உள்ளே விசாலாமான மண்டபம். மூலவர் -
சிவலிங்கத் திருமேனி - கிழக்கு நோக்கிய சந்நிதி. சதுரபீடமான ஆவுடையார்.
அக்கினி நட்சத்திரக் காலத்தில் தாரா பாத்திரம் வைக்கப் படுகின்றது.
“திருத்தளியான்காண் அவன் என் கண்ணுளானே” - அப்பரின்
அமுதவாக்குடன் தரிசிப்போர்க்கு அமைதி கிடைக்கிறது. இங்கும்
பிரான்மலையில் உள்ளது போலவே நவக்கிரகங்கள் அமர்ந்த நிலையில்
உள்ளன. அம்பாள் ஆலயம் மிகவும் விசாலமானது. கிழக்கு நோக்கிய சந்நிதி.
நின்ற திருக்கோலம். சண்டிகேஸ்வரி சந்நிதி உள்ளது. சுற்றி வலம்வர
பிரகாரம் உள்ளது. காமிக ஆகமப்படிப் பூஜைகள் நடைபெறும்.
இத்திருக்கோயிலில் வைகாசியில் பெருவிழா நடைபெறுகிறது. இத்திருக்கோயில்
குன்றக்குடி (திருவண்ணாமலை) ஆதீனத்தின் ஆளுகைக்கு உட்பட்ட
திருக்கோயிலாகும்.

     “பாங்கு நல்ல வரி வண்டிசை பாடத்
     தேங்கொள் கொன்றை திளைக்குந் திருப்புத்தூர்
     ஓங்கு கோயில் உறைவார் அவர் போலும்
     தாங்கு திங்கள் தவழ் புன் சடையாரே.”      (சம்பந்தர்)