பாண்டிய நாட்டுத் தலம். மக்கள் வழக்கில் திருப்புனவாசல் என்றாகியுள்ளது. அறந்தாங்கி ஆவுடையார் கோயில், திருவாடானை முதலிய ஊர்களிலிருந்து இத்தலத்திற்கு வரலாம். விருத்தபதி, விருத்தகாசி, இந்திரபுரம், பிரமபுரம், வச்சிரவனம், கைவல்யஞானபுரம், தட்சிணசிதம்பரம் என்பன வேறு பெயர்கள். ஊர்ப்பக்கத்தில் பாம்பாறு (சர்ப்பநதி) ஓடுகிறது. பக்கத்தில் கடல்-பாண்டிய நாட்டு தலங்கள் 14ம் இங்கிருப்பதாக ஐதீகம். இதனால் கோயிலுள் 14 சிவலிங்கங்கள் உள்ளன. வேதங்கள் வழிபட்ட தலம். இறைவன் - விருத்தபுரீஸ்வரர், பழம்பதிநாதர், மகாலிங்கேஸ்வரர். இறைவி - பிருகந்நாயகி, பெரியநாயகி. தலமரம் - (1) சதுரக்கள்ளி (2) குருந்து (3) மகிழம் (4) புன்னை தீர்த்தம் - இந்திரதீர்த்தம் முதலாகவுள்ள பத்து தீர்த்தங்கள். சம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்றது. மிகப்பெரிய கோயில். ஊர்நடுவில் கிழக்கு நோக்கியுள்ளது. நீண்ட மதில்கள். கிழக்கிலும் மேற்கிலும் வாயில்கள். கிழக்கில் இருவாயில்கள் சுவாமி அம்பாள் சந்நிதிகளுக்கு நேராகவுள்ளன. சுவாமி கோபுரம் ஐந்து நிலைகளையுடையது. அம்பாள் எதிரில் உள்ள மொட்டைக் கோபுர வாயிலில் குடவறையில் காளி எழுந்தருளியிருப்பதால், அத்தெய்வம் மிகச்சக்தி வாய்ந்ததாகையால் இக்கதவு எப்போதும் மூடப்பட்டிருக்கிறது. கோயிலுக்கு வெளியில் உள்ள தீர்த்தம் - பிரமதீர்த்தம். அழகான படிகளை நாற்புறமும் பெற்றுள்ளது. உள்ளே முதலாம், ஏழாம் திருநாள் மண்டபங்கள் உள்ளன. கோபுரத்திற்கு வெளியில் தென்பால் வல்லப கணேசர் சந்நிதியும், வடபால் தண்டபாணி சந்நிதியும் இருக்கின்றன. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே நுழைந்ததும் வலப்பக்கம் சூரிய, பைரவர் சந்நிதிகளும், இடப்பால் சந்திரன் சந்நிதியும் மேற்கு நோக்கியுள்ளன. சபாமண்டபம், மகாமண்டபம், அர்த்த மண்டபங்கள் உள்ளன. மூலவர் சிவலிங்கத் திருமேனி அழகானது. மிகப் பெரியது. தஞ்சை பிரஹதீஸ்வரருக்கு அடுத்தபடி பெரிதாக உள்ள இலிங்க மூர்த்தி இதுவாகும். இதனையொட்டி ‘மூன்றுமுழமும் ஒருசுற்று முப்பது முழமும் ஒருசுற்று’ என்ற பழமொழி வழங்குகிறது. (சுவாமிக்கு 3 முழம், ஆவுடையாருக்கு 30 முழம் ஆடைவேண்டும்.) உயரம் 9 அடி. சுற்றளவு 8 1/2 அடி. ஆவுடையார் சுற்றளவு 33 அடி. கோமுகி 3 1/2 அடி நீளம். |