பக்கம் எண் :

760 திருமுறைத்தலங்கள்


     சிவகங்கைத் தீர்த்தம் - தெற்கு. கீழவீதிகள் கூடுமிடம்.

     தலமரங்களுள் :- (1) புன்னை, மகிழ், குருந்து ஆகியவை
கோயிலுக்குள்ளும், (2) சதுரக்கள்ளி குடவறைக் காளியின் சந்நிதியின்
பக்கத்திலும் உள்ளன. அம்பாளுக்கு அழகிய சிறியதேர் உள்ளது.

     இத்தலபுராணம் திருவாரூர் தியாகராஜ கவிராயரால் பாடப்பட்டுள்ளது.
பாண்டிய மன்னர்களின் காலத்திய கல்வெட்டுக்கள் ஐந்து இத்தலத்தில்
கண்டெடுக்கப்பட்டுப் படியெடுக்கப்பட்டுள்ளன. நித்திய பூஜைகளும்
உற்சவங்களும் முறையாக நடைபெறுகின்றன. இறைவனைக் கல்வெட்டுச்
செய்தி “திருப்புனவாசலுடைய நாயனார்” என்ற பெயரால் குறிக்கின்றது.
5.9.1998ல் கும்பாபிஷேகம் நடந்துள்ளது.

     ‘மின்னியல் செஞ்சடை வெண்பிறையன் விரிநூலினன்
     பன்னிய நான்மறை பாடியாடிப் பல வூர்கள் போய்
     அன்னம் அன்னந் நடை யாளோடும் அமரும் இடம்
     புன்னை நன்மாமலர் பொன்னுதிர்க்கும் புனவாயிலே.’
                                             (சம்பந்தர்)

     “சித்த நீ நினை என்னொடு சூளறும் வைகலும்
     மத்த யானையின் ஈர்உரி போர்த்த மணாளன் ஊர்
     பத்தர் தாம் பலர் பாடி நின்றாடும் பழம்பதி
     பொத்திலாந்தைகள் பாட்டறாப் புனவாயிலே.”
                                               (சுந்தரர்)

      “அத்தனே போற்றி அகில காரணமாம்
          அம்பிகை பாகனே போற்றி
     முத்தனே போற்றி ஐந்தொழிலினையும்
          முடித்திடு மூலமே போற்றி
     நித்தனே போற்றி அறிவினுக்கறிவாய்
          நிறைந்தருள் நிமலனே போற்றி
     மத்தனே போற்றி வச்சிர வனத்தின்
          வாழுமா இலிங்கமே போற்றி.”    (தலபுராணம்)

     “நயந்தரு பரையாய் ஆதியாய் இச்சை
          ஞானமாய்க் கிரியையாய் நம்பற்
     கியங்குறுமேனி யணி படைக் கலமற்
          றெவையுமாய் மூவகை யாகத்
     தயங்கு மான் மாவின் வாழ்க்கைமுன்முத்தி
          தமக்குமோர் காரணமாகி
     வயங்குறு புனவைப் பெரியநாயகி நின்
          மலரடித் துணை மனத் துணையே.”   (தலபுராணம்)