பக்கம் எண் :

762 திருமுறைத்தலங்கள்


     பாண்டிய நாட்டுத் தலம்.

     இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும் யாத்ரிகர்கள் வந்து தரிசித்துச்
செல்லும் புண்ணியத் தலம்.

     சென்னை-இராமேஸ்வரம் இருப்புப்பாதை உள்ளது. பேருந்தில்
வருவோர் முன்னர் மண்டபத்தில் நிறுத்திவிட்டு, புகைவண்டி மூலம் பாம்பன்
பாலம் கடந்து இத்தலத்தையடைய வேண்டும். தற்போது கடலின் மேலே
பாலம் கட்டப்பட்டு அது பூர்த்தியாகிவிட்டதால் கோயில் வரை எல்லா
வாகனங்களும் செல்ல மிகவும் வசதியாக இருக்கிறது.

     இத்தலம் பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகும்.

     இராவணனைக் கொன்ற பாவம் நீங்க இராமன் சிவலிங்கப் பிரதிஷ்டை
செய்து வழிபட்ட தலம். கயிலையிலிருந்து அநுமன் கொண்டுவர,
காலந்தாமதமாக, சீதை மணலால் அமைத்த லிங்கத்தை இராமர் வழிபட்டார்.
இம்மூர்த்தியே இராமநாத சுவாமி ஆவார். காலந்தாழ்ந்து அநுமன் கொண்டு
வந்த இலிங்கம் (விசுவலிங்கம்) பக்கத்திலேயே பிரதிஷ்டை செய்யப்
பட்டுள்ளது. சிறந்த, புண்ணிய யாத்திரைத் தலம்.

     தனுஷ்கோடி - சேது இத்தலத்தையடுத்துள்ளது. இங்கு வந்து
மூழ்கினால்தான் காசி யாத்திரை பூர்த்தியாகும் என்பது மரபு.
பல்லாண்டுகளுக்கு முன்னால் வீசிய புயலால் தனுஷ்கோடி இடம் அழிந்து
போயிற்று. இப்போது அங்குச் செல்வோர் மிகக்குறைவு. அங்குக் கடல்
சங்கமம் தவிர வேறொன்றுமில்லை. இத்தலம் ஒரு தீவு. பாம்பன் பாலம்
அற்புதமான அமைப்புடையது. இப்பாலம் பாம்பனையும், மண்டபத்தையும்
இணைக்கிறது.

     இங்குள்ளவர்கள் பெரும்பாலோர் இக்கோயிலையே நம்பி வாழ்கின்றனர்.
கடற்பகுதி ‘அக்கினி தீர்த்தம்’ என்றழைக்கப்படுகிறது. இக்கரையில் ஸ்ரீ காஞ்சி
காமகோடி பீடம் ஜகத்குரு ஸ்ரீ சங்கராசார்ய சுவாமிகள் ஸ்ரீ மடத்தின் கிளை
மடமும் ; சந்நிதி வீதியில் திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடத்தின் கிளை மடமும்
உள்ளன. மற்ற மடங்களில் கிளைகளும், ஏராளமான சத்திரங்களும்
கோயிலைச் சுற்றியுள்ளன.

     இத்திருக்கோயிலின் நீண்டு அகன்ற பிராகாரங்கள் மிகச் சிறப்பு
வாய்ந்தவை. மூன்றாவது வெளிப்பிராகாரம் மிக நீளமானது என்னும்
சிறப்பினைப் பெற்றது. வெளிப்பிராகாரத்தில் 1200 தூண்கள் உள்ளன.
கலையழகு மிக்க இக்கோயிலின் சிறப்பு அளவிடற்கரியது.