பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 763


     இக்கோயிலின் வளர்ச்சிக்குப் பெரிதும் காரணமானவர்கள்
இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களேயாவர். இம்மன்னர்கள் பலரும் அவரவர்
காலங்களில் திருப்பணிகளைச் செய்து இக்கோயிலைக் கட்டி வளர்த்து
வந்துள்ளனர்.

     இறைவன் - இராமநாதசுவாமி, இராமலிங்கேஸ்வரர்
     இறைவி - பர்வத வர்த்தினி, மலைவளர்காதலி
     தீர்த்தம் - கோயிலுக்குள்ளே உள்ள 22 தீர்த்தங்களும் கோயிலுக்கு
வெளியே 22 தீர்த்தங்களும் (வெளியிலுள்ள 22 தீர்த்தங்கள் தேவிபட்டினம்,
திருப்புல்லாணி, பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம் முதலிய இடங்களில்)
உள்ளன.

     சம்பந்தர், அப்பர் பாடல் பெற்றது.

     மிகப்பெரிய கோயில். உயர்ந்த கோபுரங்கள், மூல லிங்கத்தையும்
கருவறையையும் அம்பிகைக் கோயிலையும் கி.பி. 12-ஆம் நூற்றாண்டில்
இலங்கை மன்னர் ‘பராக்கிரமபாகு’ என்பவன் கட்டியதாகச் சான்றுகள்
இருப்பதாகத் தலவரலாறு கூறுகின்றது.

     தேவஸ்தானம், யாத்ரிகர்களுக்கு மிகச் சிறப்பான வசதிகளைச் செய்து
தருகின்றது. பலவகைகளில் தங்கும் விடுதிகள் பலவுள்ளன. இராமநாத சுவாமி
சந்நிதியிலுள்ள இலிங்கம் சீதையால் அமைக்கப்பட்டது. அநுமன் கொண்டு
வந்த மூர்த்தம் விசுவலிங்கம், முதற் பூசை இச்சந்நிதியில்தான் தொடங்குகிறது.
அம்பாள் சந்நிதியில் உள்ள ஸ்ரீ சக்கரம் தரிசிக்கத்தக்கது. இக்கோயிலில்
உள்ள சேது மாதவர் சந்நிதி சிறப்பானது.

     இக்கோயிலுக்கு வடக்கில் 2 கி.மீ. தொலைவில் ‘கந்த மாதன பர்வதம்’
உள்ளது. இங்குள்ள இருபாத சுவடுகள் ‘இராமர் பாதம்’ எனப்படுகின்றன.
இங்குள்ள தீர்த்தம் ஜடா தீர்த்தம் எனப்படும். கோதண்டராமர் கோயில்
சேது (தனுஷ்கோடி) ஸ்நான கட்டத்திற்குச் செல்லும் வழியில் - 5 கி.மீ.
தொலைவில் உள்ளது. நாடொறும் ஆறு கால பூசைகள் முறையாக நியமப்படி
நடைபெறும். இத்திருக்கோயிலில் எல்லாச் சிறப்பு விழாக்களும்
நடைபெறுகின்றன. சிவராத்திரி அபிஷேகங்கள், திருக்கல்யாண உற்சவம்,
தெப்போற்சவம், வாராந்திரத் தங்கப் பல்லக்குப் புறப்பாடு (வெள்ளிக்
கிழமைகளில்) வசந்தோற்சவம் இராமலிங்கப் பிரதிஷ்டை விழா முதலியவை
சிறப்புடையவை.